இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் கூட்டணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் மீன் வளங்களைப் பேணும் வகையில் முகாமைத்துவம் செய்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதித்துள்ளது.
சூரை மீன் பிடிக்கும் தொழிலானது இந்து சமுத்திர வலயத்தின் தேசிய பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, தொழில் உருவாக்கம் மற்றும் கடலோர சமூகத்தவர்களின் சமூக பொருளாதார உறுதிப்பாட்டுக்கு அதிகளவில் பங்களிப்பு வழங்குகின்றது.
ஆனாலும், அதிகளவான மீன்களைப் பிடிப்பதால் மீன்கள் குறைவடையும். அத்தோடு, உணவுப் பாதுகாப்புக்கும் ஆபத்து நேரும். அதனால், சூரை மீன் வளங்கள் முகாமைத்துவத்தில் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்காக பங்களாதேஷ், இந்தோனேசியா, ஈரான், மடகஸ்கார், மலேசியா, மாலைதீவு, மொசம்பிக், பாகிஸ்தான், சோமாலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் மூலம் இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


