தமிழ் மக்களின் காணிகளை தொடர்ச்சியான கையகப்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து விட்டு, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை வழங்குவது எந்தளவுக்கு நியாயமாகும். எங்கள் விளைநிலங்களை,தோட்டங்களைத் தாருங்கள். தரையிலும் கடலிலும் எங்களைத் தொழில் புரிய வகை செய்யுங்கள், காணாமல் ஆக்கப்பட்ட – சிறையில் வாடும் எங்கள் உறவுகளை விடுவித்து அவர்கள் குடும்பங்களை ஆற்றுப்படுத்துங்கள். அதுவே உண்மையான ஆறுதல் நலன்புரித் திட்டம் என .இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நலனோம்பல் வழியே மக்களை ஆற்றுப்படுத்தும் முயற்சிகள் எப்போதும் வரவேற்புக்குரியன.ஆனால் மக்கள் எப்போதும் ஆற்றுப்படுத்தப்படுவதில்லை! ஆற்றுப்படுத்துவதற்கான அளவுகோல்கள் இந்த நிலத்திலே வீசி எறியப்பட்டிருக்கின்றன.
ஒரு குடும்பத்தின் வறுமையை ஓரிரு பரிமாணங்களில் அளவிடுவதற்கு மேலாக கல்வி,சுகாதாரம், பொருளாதார மட்டம், சொத்து, வீடமைப்பு நிருமாணம் மற்றும் குடும்ப மக்கள் தொகை என ஆறு பரிமாணங்களில் 22 சுட்டிகள் ஊடாக வறுமையின் பல் பரிமாணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வறியவர்கள் ஆறுதல் நலன்புரி நன்மைகளுக்காக தெரிவுசெய்யப்படுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுகளின் அடிப்படையில் முதலாவது கட்டத்தில் மேற்படி ஆறுதல் நலன்புரி நன்மை கொடுப்பனவுத் திட்டத்தில் 14842 குடும்பங்களும் இரண்டாவது கட்டத்தில் 2942 குடும்பங்களுமாக மொத்தம் 17784 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பித்தோரில் முதல் கட்டத்தில் 52.64சதவீத குடும்பங்களும் இரண்டாம் கட்டத்தில் 55.86 சதவீத குடும்பங்களும் மேற்படி கொடுப்பனவுத் திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் காணப்பட்ட செழிப்பு (சிங்களத்தில் சமுர்த்தி) கொடுப்பனவு முறைமையை விடவும் மேம்பட்டவகையில் பல்பரிமாண வறுமைச் சுட்டிகளின் பயன்பாட்டோடு கொண்டுவரப்பட்ட இம்முறைமையிலும் பொருத்தமற்றவர்கள் உள்ளீர்க்கப்பட்டமை, உள்ளீர்க்கப்பட வேண்டியோர் விலக்கப்பட்டமை என இருவகை முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் புறத்தே உள்ளன.
ஆறுதல் நலன்புரி நன்மை கொடுப்பனவுத் திட்டத்தின் தொடர்ச்சியில் பின்வரும் காரணிகளில் இவ்வரசு கூடுதல் கவனத்தை எடுக்குமாறு கோருகிறேன். அந்தவகையில் எண்ணீடுகளை வினைத்திறனாக மேற்கொள்ளல் தொடர்ச்சியான கண்காணிப்பும் மதிப்பீடும், சமர்ப்பிக்கப்படும் ஆட்சேபனைகளுக்குரிய காலதாமதமின்றிய மறுமொழிகள் வழங்கல்இ 6 துறைகளின் 22 சுட்டிகள் எனும் அளவிடல் முறையை மேலும் மேம்படுத்தல் உள்ளிட்ட விடையங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும்.
இவற்றுக்கு மேலாக, தீவளாவிய கணிப்புகளுக்கு அப்பால், வட கிழக்கு பகுதி, குறிப்பாக வன்னி நிலத்தில் வறுமை தொடர்ச்சியாக தக்கவைக்கப்படுவதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
மேற்படி கொடுப்பனவுத் திட்டம் 5-16 வயதுக்கு உட்பட்ட இடைவிலகிய மாணவர்களையும் க.பொ.த. (சா/த) பெறுபேறுக்கு கீழான சித்திநிலையையும் கல்வித்துறை சார்பான வறுமையின் சுட்டியாக அடையாளப்படுத்துகிறது.
போருக்குப் பின்னர் 23 பாடசாலைகள் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் மூடப்பட்டுள்ளன. மேற்படி வலயத்தில் 4 பாடசாலைகளில் 50 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 45 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலையை வறிதாக்கிச் சென்றுள்ளனர்.இத்தகைய சூழமைவு மாணவர் இடைவிலகலையும் மாணவர்களின் கல்வி அடைவில் வீழ்ச்சியையும் தூண்டாதா?
இத்தகைய சூழமைவு மாணவர்களையும் சமூகத்தையும் வறுமைக்குள் தள்ளாதா? வாழ்வாதார நிலங்கள், வாழுகின்ற வீடு, காணி இல்லாதிருப்பது வறுமையின் அடையாளம். நெற்செய்கை நிலம்,மேட்டுநிலம், வாழுகின்ற வீடு மற்றும் காணி இல்லாதிருப்பதை வறுமையின் சுட்டியாக ஆறுதல் நலன்புரி கொடுப்பனவுத் திட்டம் அடையாளப்படுத்துகிறது.
இராணுவ கையப்படுத்தலில்,வனவளத் திணைக்களம்,தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தில், தமது சொந்த நிலங்களை, விளைநிலங்களை,மேட்டு நிலங்களை, குடியிருப்பை, தோட்டங்களை பறிகொடுத்து மாற்றுக்காணிகளில் தற்காலிகமாக காத்திருக்கும் மக்களை இந்தச்சுட்டிகள் வறுமைப்பட்டவர்களாக அடையாளப்படுத்துகிறதா? இல்லை, வறுமை அற்றவர்களாக அடையாளப்படுத்துகிறதா?
சொந்த நிலங்களுக்காக காத்திருக்கும் முல்லைத்தீவின் கேப்பாப்பிலவு மக்கள், மன்னாரின் முள்ளிக்குளம் மக்கள் சுட்டிகளின் அடிப்படையில் வறியவர்களா? வறுமைப்படாதவர்களா?
இந்திய இழுவைப்படகுகளாலும், ஈழத்துக்குள்ளான சட்டவிரோத தொழில் முறைகளாலும் அடித்த எரிபொருளுக்கும் மீன்பிடிக்காமல் கரை திரும்பும் மீனவர்கள் இந்தச் சுட்டிகளின் படி வறியவர்களா? வறுமைப்படாதவர்களா இறுதிப்போரில் உங்களிடம் நம்பி ஒப்படைத்து இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு,அரசியல் கைதிகளாக இன்றளவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்கள் உறவுகளின் குடும்ப வறுமைக்கு உங்களின் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரித்திட்டத்தின் ஆறுதல் போதாது!
ஒருபக்கம் எங்களுக்கு வறுமையை தக்கவைக்கும் அதே அரசு தான் மறுபுறம் எங்களுக்கு ஆறுதல் (அஸ்வெசும) என்ற பெயரில் ஒரு நலன்புரித் திட்டத்தைத் தருகிறது!நாங்கள் உழைப்பாளிகள்! உண்ண உணவுக்கு மாற்றாக உணவைப் பயிரிட்ட எங்கள் நிலங்களைத் தாருங்கள், எங்கள் குடியிருப்புக் காணிகளைத் தாருங்கள், காடுபற்றிப் போயுள்ள எங்கள் விளைநிலங்களை, தோட்டங்களைத் தாருங்கள்.
தரையிலும் கடலிலும் எங்களைத் தொழில் புரிய வகை செய்யுங்கள், காணாமல் ஆக்கப்பட்ட – சிறையில் வாடும் எங்கள் உறவுகளை விடுவித்து அவர்கள் குடும்பங்களை ஆற்றுப்படுத்துங்கள்.அதுவே உண்மையான ஆறுதல் நலன்புரித்திட்டம் என்றார்.


