திருகோணமலை ‘சண்டி பே’ கடற்கரையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
திருகோணமலையில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள சண்டி பே கடற்கரையின் ஒரு பகுதியை விடுவிப்பதாக ஜனாதிபதி ஊடகங்கள் வாயிலாக அறிவித்த போதிலும், தமக்கு அந்த பகுதியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
திருகோணமலை மனையாவெளி கடற்றொழில் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே மீனவர்கள் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
1990ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள், மீளவும் தமது பகுதிகளுக்குக் குடியேறியுள்ளனர்.
இருப்பினும், இன்று வரை தமது வாழ்வாதார நிலங்களும் கடற்கரைப்பகுதியும் இலங்கை கடற்படையினரின் வசமே காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடற்கரையோரத்தில் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள வேலி காரணமாக, மீனவர்கள் பாரம்பரியமாகத் தொழில் செய்த பகுதிகளுக்குள் நுழைய முடியாத தடை நீடிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
அத்துடன், கடற்கரையின் ஒரு பகுதி மாத்திரமே படகுகளை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போதிய இடவசதியின்மையால் அதிருப்தி அடைவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டினர். இது தமது வாழ்வாதாரத்தையும் சுற்றுலாத்துறை வருமானத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது.
மீன்பிடி மற்றும் சுற்றுலாப் படகு சேவைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ளூர் மீனவர்கள் புறக்கணிக்கப்படுவதாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 103 அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலானவை வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் மக்களுக்கு ஒரு வீதத்திற்கும் குறைவான அனுமதிப்பத்திரங்களே கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமது உரிமைகளை நிலைநாட்டவும், ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு இணங்க கடற்கரையை விடுவிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என மீனவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.



