தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவருக்கு ரவூப் ஹக்கீம் புகழாரம்

இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முஸ்லிம் குடும்பம் ஒன்று மிகமுக்கிய உதவிகளை வழங்கியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் மூண்டிருந்த கடினமான காலகட்டத்தில், சிலாபத்தைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பம் ஒன்றே தலைவருக்குப் புகலிடமோ அல்லது தேவையான உதவிகளையோ வழங்கியிருந்தது.

இதனைத் தானும் ஒருபோதும் மறக்கப்போவதில்லை எனச் சமாதானப் பேச்சுவார்த்தையின் போது பிரபாகரன் தன்னிடம் நேரில் கூறியதாக ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

சமாதானப் பேச்சுவார்த்தை காலப்பகுதியில் கிளிநொச்சியில் புலிகளின் தலைவரைச் சந்தித்த அனுபவத்தை ரவூப் ஹக்கீம் இதன்போது விபரித்தார்.

“தாங்கள் கிளிநொச்சி சென்றபோது ஒரு நாட்டுத் தலைவருக்கு வழங்கப்படுவது போன்ற அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், வீதியின் இருபுறமும் பெண் போராளிகள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தியதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

சுமார் நான்கரை மணிநேரம் பேச்சுவார்த்தை நீடித்ததாகவும், அதன் இடையே நாங்கள் தொழுவதற்காகப் பேச்சுவார்த்தையை நிறுத்தி, பிரபாகரன் தங்களுக்கு நேரத்தை ஒதுக்கித் தந்திருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், “முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஹலால் முறையிலான மாமிச உணவுகளைத் தயார் செய்து தாங்கள் உபசரிக்கப்பட்டதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், முஸ்லிம் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவில் இத்தகைய புரிந்துணர்வுகள் இருந்ததை அவர் தமது உரையில் நினைவு கூர்ந்தார்.