இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மரக்கறி, பழங்கள் போன்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக உள்ளது.
இதன்போது காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான தற்போது பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை இதற்காகப் பயன்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
விவசாயம், கால்நடை வளம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவிற்கும் சீன வர்த்தக சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று அண்மையில் ‘கொவிஜன மந்திரய’வில் இடம்பெற்றதுடன், இதன்போது அவர்கள் இந்த முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
அது தொடர்பான திட்டவட்டமான முன்மொழிவொன்று சீன வர்த்தக சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அது அமைச்சரிடமும் ஜனாதிபதி செயலகத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முன்மொழிவு தொடர்பில் அமைச்சரின் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.



