பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை அதிபர் சேவையில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இணைப் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் (தரம் 1) ஆகியோரிடையிலிருந்து துறைத் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்கும் துறைச் சபையை இயலச் செய்வித்தல், துறைத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய முன்னர் துறைத் தலைவர் ஒருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கு பேரவையை இயலச் செய்வித்தல் மற்றும் துறையொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலம் தொடர்பில் மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தல் போன்றவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் அமைந்திருப்பதாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரை நியமிக்கும்போது பேரவையினால் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறையைக் குறித்துரைத்தல், கற்கைப் பகுதியொன்றின் தலைவரினதும் பதவிக்காலம் முடிவடைய முன்னர் கற்கைப் பகுதியின் தலைவரொருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்குப் பேரவையை இயலச் செய்வித்தல், கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலங்கள் தொடர்பில் ஏற்புடையற்பாலனவான மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வதும் இந்தச் சட்டமூலத்தின் சட்டப் பயனாக அமையுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீண்ட கலந்துரையாடலின் பின்னர் குறித்த சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி வழங்கியது.
அத்துடன், இலங்கை அதிபர் சேவைக்கான ஆட்சேர்ப்புக் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. 2019ஆம் ஆண்டில் 1918 வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையிலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக இங்கு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
2019ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றியவர்களிலிருந்து 2022ஆம் ஆண்டு 155 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருப்பதுடன், 2023ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய 4,672 பேரைக்கொண்ட தொகுதியினரும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், 2019ஆம் ஆண்டு பிரிவில் தெரிவாகி அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்படாத சிலர் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
எனினும், பல்வேறு காரணங்களுக்காக 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரீட்சையின் அடிப்படையில் தொடர்ச்சியாக ஆட்சேர்ப்புக்கள் இடம்பெற்றமையாலேயே இப்பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக குழு சுட்டிக்காட்டியது. ஏன் வருடாந்தம் போட்டிப் பரீட்சை நடத்தப்படவில்லையென்றும், புதிதாக ஏன் பரீட்சை நடத்தப்படவில்லையென்றும் குழு கேள்வியெழுப்பியது.
இக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ். இராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சுகத் வசந்த.த சில்வா, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, சுஜீவ திசாநாயக்க, சானக மாதுகொட, சஞ்ஜீவ ரணசிங்க, துரைராசா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.



