இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயும் நோக்கில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் அசோக் குமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2.3 பில்லியன் ரூபாய் உதவித் தொகையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களை நேரடியாகக் கண்காணிப்பதற்காகவே தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக இந்தியத் தூதரகத்தின் முதல் செயலாளர் தெரிவித்தார்.
ஆரம்பக் கட்டத்திலிருந்தே இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வழங்கப்பட்ட ஆதரவுக்காக இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் இந்தத் திட்டங்களை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தனது குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது உறுதி அளித்தார்.



