இலங்கை இராஜதந்திர வரலாற்றில் வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் இத்தனை ஆழமான தாக்கத்தை ஏற் படுத்திய, அதேசமயம் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு விடைபெறுவது அண்மைய தசாப்தங்களில் முதற்தருணமாகும்.
2022 பெப்ரவரி மாதம், இலங்கை பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்திருந்த சூழலில் அரசியல் கொந்தளிப்பு ஆரம்பித்திருந்த நிலையில் தான் தனது இராஜதந்திரக்கடமைகளை ஏற்று கொழும்புக்கு வருகை தந்திருந்தார் ஜூலி சங். அன்று முதல் 2026 ஜனவரி 16 அன்று அவர் நாட்டைவிட்டு உத்தியோக பூர்வமாக வெளியேறும் வரை யில், இலங்கையின் கோட்டாபய, ரணில், அநுர ஆகிய மூன்று மாறுபட்ட கொள்கைகளையுடைய நிறைவேற்று ஜனாதிபதிகளுடன் பணியாற்றியவராக உள்ளார்.
நான்கு ஆண்டுகள் இலங்கையில் கடமை யாற்றியுள்ள அவர் வெறும் தூதுவராக மட்டுமன்றி, ஒரு அதிகாரமிக்க அரசியல் சக்தியாகவே மாறியிருந்தார் என்பது கொழும்பை உன்னிப்பாக அவதானித்த அத்தனை பேரும் மறுதலிக்க முடியாத விடயமாகும்.
கோட்டாபயவின் காலத்தில் உள்ளக நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தாலும்; ஜூலி சங்கின் வருகைக்குப் பின்னரே ‘அரகலய’ போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஜனநாயக ரீதியாக போராடுவதற்கான உரிமை குறித்து அவர் பதிவி ட்ட டுவிட்டர் கருத்துக்கள், போராட்டக்காரர்களுக்கு ஊக்க மளித்த அதேவேளை, அப்போதைய ராஜபக்ஷ அரசாங் கத்திற்கு பெரும் தலையிடியாக இருந்தது.
அதுமட்டுமன்றி, ‘அரகலய’வை அமெரிக்கா தான் பின்னணியில் நின்று இயக்கியது என்பதும், அதற்கு எதிராக கோட்டாபாய இராணுவ ரீதியான கட்டுப்படுத்தும் தீவிரப்பாதைக்கு செல்லாமல் இருந்ததின் பின்னணியில் ஜுலி சங்கே இருந்தார் என்பதும் பகிரங்கமான குற்றச் சாட்டுக்களாகும்.
அதுமட்டுமன்றி, அரகலயவின் முடிவில் ஏற் பட்ட ஆட்சிமாற்றத்துடன், ஜுலி சங் இலங்கையின் வரை படத்தைத் தனது காலில் பச்சை குத்திக் கொண்டமை, நாட்டின் மீதான அவரது அதீதமான பற்றாக ஒரு தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்டாலும்;, ‘இலங்கையைத் தனது காலடி யில் வைத்திருக்கும் ஏகாதிபத்திய மனோபாவத்தின் அப் பட்டமான வெளிப்பாடு’ என்றே தென்னிலங்கையில் பார்க் கப்பட்டது.
2024இல் அவரது பதவிக்காலம் முடிவடையவிருந்தும், இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கருத்திற் கொண்டு அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் அவரது சேவையை சொற்பகாலம் நீடித்தது. அதன்பின்னர் எலிச பெத் கே. ஹொர்ஸ்ட் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் செனட்டின் அங்கீகாரம் கிடைப்பதற்குள் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்துவிட்டார்.
அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததும், தனது விசுவாசியான எரிக் மேயரை கடந்த ஜுலை மாதம் நியமித்து செனட்டிலும் அங்கீகாரத்தைப் பெற்ற நிலையில் சேவை நீடிப்பில் இருந்த 30 தூதுவர்களை உடனடியாக மீளஅழைத்து உத்தரவிட்டதன் விளைவாகவே ஜுலி சங் விடைபெற வேண்டியதாயிற்று.
இந்நிலையில் அவருடைய இராஜதந்திர சேவைக் காலத்தில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தை அமெரிக்காவின் விருப்பங் களுக்கு இணங்கச் செயற்பட வைப்பதற்கான இணக்கப் பாடுகளை பெற்றுக்கொண்டதில் ஜூலி சங் மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளார்.
அதுமட்டுமன்றி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்கும் அமெரிக்காவின் மூலோபாயத்தில் ஜூலி சங் மிகத் தீவிரமாகச் செயற்பட்டார். இவரது பதவிக்காலத்தில் இலங்கை பாதுகாப்புத் துறைக்கு எல்லையற்ற ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
2022 ஆகஸ்ட் மாதம், அமெரிக்கக் கடலோரக் காவல் படையின் ‘டக்ளஸ் முன்ரோ’ எனும் கப்பல் இலங் கையின் ஆழ்கடல் கண்காணிப்பில் கடற்படையிடம் கைய ளிக்கப்பட்டது. 2024 ஜூன் மாதம், கடல்சார் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதில் இலங் கையின் வான்வழித் திறனை மேம்படுத்தும் பேரில் அதிநவீன கண்காணிப்பு விமானம் வழங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில், இலங்கை கடலோரப் பகுதிகளில் அதிநவீன ராடர் கட்டமைப்புகள் அமெரிக்க நிதி உதவியுடன் நிறுவப்பட்டன. இது சீனா உள்ளிட்ட வெளிநாட்டு ஆய்வு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்க ளின் நடமாட்டத்தை துல்லியமாகக் கண்காணிப்பதற்கு வழிவகுத்துள்ளது.
அதுமட்டுமன்றி ஜுலி சங் 2026இல் விடைபெறும் இத்தருணத்திலும் கூட பெல் 206ரக ஹெலிகொப்டர்கள் பத்தை விமானப்படைக்கு வழங்குவதற்கான இணக்கப் பாட்டை ஏற்படுத்தியுள்ளார். ஜுலி சங்கின் காலத்தில் வழங்கப்பட்ட அமெரிக்க ஒத்துழைப்புக்கள் இலங்கையின் பாதுகாப்புத்துறை ஏறக் குறைய அமெரிக்காவின் ‘பிடி’க்குள் சென்றுவிட்டது என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி இலங்கையின் பொருளாதார நெருக்கடியான சூழலில் தானாக உட்புகுந்துகொண்ட ஜுலி சங், சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்கள் கடனைப் பெறுவதற்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவைப் உறுதி செய்தார். 2022 முதல் 2025 வரை சுமார் 300 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை விவசாயம், கல்வி மற்றும் ஊட்டச்சத்துத் திட்டங்களுக்காக யு.எஸ்.எய்ட் நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கு வழிசமைத்திருந்தார்.
2025 டிசம்பரில் இலங்கையைத் தாக்கிய ‘தித்வா’ சூறாவளிப் பேரழிவின் போது, 72மணி நேரத்துக் குள் 2மில்லியன் டொலர்களை அனர்த்த உதவி நிதியாக அமெரிக்கா அறிவிப்பதற்கு காரணமாக இருந்ததோடு மேலதிகமாக 2மில்லியன் டொலர்கள் அறிவிக்கப்படுவதற் கும் காரணமாக இருந்தார்.அதுமட்டுமன்றி இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்காக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த 44சத வீதமான வரியை 20சதவீதமாக குறைப்பதற்கான உரை யாடல்களுக்கான பாதையை வரைந்து கொடுத்தவரும் ஜுலி சங் தான்.
மேற்படி விடயங்கள் அனைத்துமே அமெரிக்க நலன்களின் அடிப்படையில் தான் முன்னெடுக்கப்பட்டன. அதுமட்டுமன்றி, மத்தள விமான நிலையத்தை ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து அபிவிருத்தி செய்வதை ஜூலி சங் தடுத்தமை, இலங்கையின் பொருளாதார சுதந்திரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையீடு செய்வதாக விமர்சிக்கப்பட்டது.
அமெரிக்கத் தூதரகத்தில் ‘Pride Flag’ ஏற்றியமை மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை களுக்காக அவர் முன்நின்றமை, நாட்டின் சமூகக் கட்ட மைப்பில் பெரும் விவாதங்களை உருவாக்கியது.
அதேபோன்று தான் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் தமக்கு சார்ந்த சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுடன் அவர் கொண்டிருந்த உறவு என்பது தனது தேவைக்கு பயன்படுத்தக்கூடிய ‘கறிவேப்பிலை;’ போன்றதொன்றாகவே காணப்பட்டதே தவிர நீதி, நியாயம், பொறுப்புக்கூறலுக்காக அர்ப்பணிக்கப்பட்டதொன்று அல்ல என்பது வெளிப்படையானது.
இதேநேரம்ட, ஜுலி சங் விடைபெறும் காலத்தில் மிகுந்த கசப்பான அனுபவத்துடன் வெளியேற வேண்டிய தவிர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஹவாய் தீவில் ‘இந்தோ-பசிபிக்’ பிராந்திய அமெரிக்கத் தூது வர்களின் மாநாடு இடம்பெறுவதற்குரிய ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
குறித்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் பிராந்தியத் தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் அனைத்து அமெரிக்கத் தூதுவர்களும், அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளும் மற்றும் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் கலந்துகொள்வது வழக்கம்.
ஒவ்வொரு தூதுவர்களும் தாம் கடமையாற்றும் நாட்டில் காணப்படுகின்ற சமகால நிலைமைகள் குறித்த துல்லியமான தகவல்களை குறித்த மாநாட்டில் சமர்ப்பித்து, அந்த நாடு தொடர்பாக அமெரிக்கா அடுத்துவரும் காலங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த புதிய மூலோபாய உத்திகளை வகுப்பதே நோக்கமாகும்.
அதற்கமைய, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் ஒருவித வினைத்திறனற்ற தன்மை காணப் படுவதையும், 2026இன் ஏப்ரல் – மே காலப்பகுதியில் இலங்கையில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி உருவாவதற்கான அபாயம் உள்ளதாகவும், அதனுடன் இணைந்து அரசியல் நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்படுகின்றன.
அவ்விதமானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் அமெரிக்கா எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து தெளிவு படுத்துவதற்கு ஜுலி சங் திட்டமிட்டு ஏற்பாடுகளையும் முனைப்புடன் முன்னெடுத்து வந்திருந்தார்.
ஆனால், கடந்த வாரம் ஜூலி சங் வொஷிங்டனுக்கு சென்றபோது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹவாயில் நடைபெறவிருந்த வருடாந்த மாநாட்டை இரத்துச் செய்வதாக அறிவித்ததோடு சேவை நீடிப்பில் உள்ள ஜூலி சங் உட்பட 30அமெரிக்கத் தூதுவர்களையும், அதிகாரிகளையும் மீள அழைத்துவிட்டார்.
இதனால் ஜுலி சங் தனது எதிர்வுகூறல்களை மேற்கொள்வதற்கான தளம் தகர்க்கப்பட்டு விட்டது. அதுமட்டுமன்றி அவரது கணிப்புக்கள் கவனத்தில் கொள்ளப்படுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
எவ்வாறாயினும், ஜூலி சங் இலங்கையில் பணியாற்றிய 28 அமெரிக்கத் தூதுவர்களில் அனைத்து மட்டங்களிலும் அதிக செல்வாக்கு மிக்கவராக கருதப்படு கின்றார்.
சீன சார்பு, இடதுசாரித்து சிந்தனையாளர்களான ஜே.வி.பியின் தலைமையகத்திற்கே சென்று அவர்களை தம்வசப்படுத்தியமை முதல், அவருடைய தொடர்ச்சியான செயற்பாடுகள் தற்போதைய இலங்கைக்கும் அமெரிக் காவுக்கும் இடையிலான உறவுவை ‘அமெரிக்க மையவாதம்’ புதிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றது.



