திருகோணமலை கோட்டை பிள்ளையார் கோவில் கட்டுமானத்துக்கு எதிராக முறைப்பாடு

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை நுழைவாயிலில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் சட்டவிரோதமானவை எனத் தெரிவித்து, இன்று திருகோணமலை தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் எதிர்ப்பு குடிமக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார என்பவரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், “சட்டம் என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அண்மையில் கரையோரத்தில் புத்தர் சிலையை வைத்ததாகக் கூறி 4 பௌத்த மதகுருமார் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.

அத்துடன்,ஒரு தரப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், இவ்வாறான கட்டுமானங்கள் குறித்து காவல்துறை ஏன் பராமுகமாக இருக்கிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாளை தொல்லியல் திணைக்களம் மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றிலும் தாம் முறைப்பாடுகளைச் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.