மாகாண சபை விவகாரத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கு: சிறிநாத் எம்.பி அதிருப்தி

தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகக் கூறிவிட்டு, தற்போது அந்த விடயத்தில் பாரிய காலதாமதத்தைச் செய்து வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு காக்காச்சுவட்டைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதுடன் மாத்திரமல்லாமல், முன்மொழியப்படும் புதிய அரசியலமைப்பு மாற்றத்தில் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசம், அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் போன்ற விடயங்கள் மிகத் தெளிவாக உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்குக் கிடைத்த குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை முறையைக்கூட நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் மாகாண சபைகளை இயங்க விடுவதில் அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது.

“நாட்டின் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பின்னரே வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி முன்னர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது ஒரு வருடம் கழிந்துள்ள நிலையிலும் மாகாண சபை விவகாரத்தில் முன்னேற்றம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், யுத்த காலத்தில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளாக இருந்த வடகிழக்கின் பல கிராமங்கள் சுகாதார வசதிகளில் இன்றும் பின்தங்கியே உள்ளன.

இவற்றை மேம்படுத்த கடந்த காலங்களில் நிதி கிடைத்திருந்தும் அவை முழுமையாகச் செலவிடப்படவில்லை. எனவே, இந்த அரசாங்கம் அனைவரையும் சமமாகப் பார்ப்பதாகக் கூறுவதை விட, பின்தங்கிய பகுதிகளுக்கு விசேட நிதியொதுக்கீடுகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம், மட்டக்களப்பின் படுவாங்கரைப் பகுதியில் போதிய வைத்தியசாலை வசதிகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத், வெள்ள அனர்த்த காலங்களில் நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெறக்கூடிய ஆதார வைத்தியசாலைகள் அங்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அமைச்சரவைக்குத் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.