டித்வா புயலால் இயற்கை வனச்சூழல் தொகுதிகள் பாதிப்பு

டித்வா புயலுடன் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள், இலங்கையின் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச் சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மலைநாட்டின் இயற்கைக்காடுகளில் 34 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக சுற்றாடற்துறை அமைச்சர் தம்மிக படபெந்தி குறிப்பிட்டுள்ளார்.

தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, தனது அறிக்கையை புதனன்று தன்னிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனர்த்தம் நாட்டின் ஏழு பிரதான நதிப் படுக்கைகளின் சூழல் தொகுதிகளையும் பாதித்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அனர்த்தத்தின் விளைவாக இலங்கையின் கடலோர மற்றும் கடற் சூழல் தொகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.