திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தேரர்களை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (16) நேரில் சந்தித்தார்.
திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று காலை விஜயம் செய்த விமல் வீரவங்ச, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தேரர்களின் நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தேரர்களின் கைது நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் சதி இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
“தேசிய மக்கள் சக்தியின் (NPP) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தை முன்னிறுத்தி, திட்டமிட்ட வகையில் இந்த விடயம் கையாளப்பட்டுள்ளது என்பது தெட்டத்தெளிவாகப் புலப்படுகிறது எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
விமல் வீரவன்சவைத் தொடர்ந்து, பத்தரமுல்லே சீலரதன தேரரும் இன்று சிறைச்சாலைக்குச் சென்று விளக்கமறியலில் உள்ள தேரர்களைச் சந்தித்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வீழ்ச்சிக்கு அவருடைய அமைச்சர்களே காரணமாக இருக்கப் போகிறார்கள் எனத் தெரிவித்தார்.
திருகோணமலையில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சட்டச் சிக்கல்களை அடுத்து, நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்க தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



