நேரில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு, சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியின்றி உணவு வழங்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தடுத்த கிராம சேவையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, “இன்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்க வேண்டியிருப்பதால், அவரால் நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

“காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர், நீதிமன்றத் தவணையின் போது நேரில் முன்னிலையாக வேண்டியது சட்டக் கடமையாகும். அதனை விடுத்து, சட்டத்தரணி ஒருவரை அனுப்பிவிட்டு சமுகமளிக்காமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என சுமந்திரன் மன்றுக்குச் சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பதில் நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாததைச் சுட்டிக்காட்டி, எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி அவரைத் தவறாது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்குக் கட்டளையிட்டார்.