யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் சுதந்திரமான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தைப்பொங்கல் தினமான நேற்று (15) வவுனியா ஏ-9 வீதியில் 3,251 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வரும் தாய்மார்கள், தமது போராட்டக் களத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தனர்.
தமிழ் அறிஞர்களின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வுப் பிரிவை உருவாக்க வேண்டும் எனவும் இது தமிழ் சைவம் மற்றும் தமிழ் பௌத்தத்தின் வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வதுடன், பண்டைய சிலோன் மற்றும் தென்னிந்தியா என விரிந்து பரந்திருந்த தமிழ் நாகரிகத்தை ஆவணப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் தமிழர்கள் இந்த மண்ணிற்குப் புதிதாக வந்த குடியேறிகள் அல்ல. சிங்கள அடையாளம் அல்லது மகாவம்சக் கதைகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தமிழர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர்.
சிங்கள இனவாதக் கதைகள் மூலம் தமிழர்களை வெளியாட்களாகச் சித்தரிக்கும் முயற்சிகளை தாங்கள் முற்றாக நிராகரிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சிங்களத் தலைவர்களின் ஒருதலைப்பட்சமான கருத்துக்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல், தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு மற்றும் இறையாண்மை குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் செவிசாய்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதேநேரம் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் குறித்த உண்மையை வெளிப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் அவர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க ஆதரவளிக்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.



