யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காகப் புதிய புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற “முழுநாடுமே ஒன்றாக” எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவக் கூறுகளுடன் கூடிய புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இதற்கான நிலையத்தை அமைக்கப் பொருத்தமான கட்டடத்தை வழங்குமாறு கடற்றொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கற்பிட்டி, மிகிந்தலை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் இடைத்தங்கல் இல்லங்கள் ஒதுக்கப்பட்டு, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புனர்வாழ்வு பெறுபவர்களின் வாழ்வாதாரத்திற்காக 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க கைத்தொழில் அபிவிருத்தி சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் “போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் குற்றவாளிகள் அல்ல, அவர்கள் நோயாளிகள். அவர்களை அவமானப்படுத்தாமல், சமூகப் பழிச்சொற்களுக்கு ஆளாக்காமல் மீண்டும் நல்வாழ்விற்குத் திருப்புவதே தங்களது நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்புச் சபையின் தலைவராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க செயற்படுவதுடன்
மதத் தலைவர்கள் குழு, புனர்வாழ்வு குழு மற்றும் பொதுமக்கள் குழு எனப் பல்வேறு மட்டங்களில் உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


