இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களின் தண்டனையைத் தளர்த்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
நீண்டகாலமாக சிறையிலுள்ளவர்களின் தண்டனைக்காலத்தைக் குறைப்பது அல்லது அவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஏற்கனவே 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.
இந்த நடவடிக்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமன்றி, நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் பொதுவானதாக இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்ந குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை மிக விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான இயக்கத்தின் தகவல்படி, சுமார் 10 பேர் இன்னும் இந்த சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் விடுதலையை உறுதி செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் அரசியல் கைதிகள் தொடர்பான மேலதிக அல்லது இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதேனும் இருப்பின், அவற்றைத் தன்னிடம் நேரடியாகச் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் பொதுமக்களிடமும் ஆர்வலர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.


