அமெரிக்காவின் கத்தார் தூதரகம், தனது ஊழியர்களுக்கும் அமெரிக்க குடிமக்களுக்கும் எச்சரிக்கை

அமெரிக்காவின் கத்தார் தூதரகம், தனது ஊழியர்களுக்கும் அமெரிக்க குடிமக்களுக்கும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

“பிராந்தியத்தில் தொடரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும், அல்-உதெய்த் விமானப்படை தளத்துக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. கத்தாரில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களும் இதேபோல் செயல்படுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று  அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவரத்தை தாங்கள் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

இதற்கு முன்னர்,கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் – உதெய்த் விமானத் தளத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து வருகிறது எனவும், இதை அதிகாரிகள் “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று குறிப்பிட்டுள்ளனர் எனவும் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் கூறியுள்ளது..

அதே நேரம் கத்தாரிலிருந்து சில பிரிட்டன் படைகளும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 28 முதல் இரானில் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார நிலையை எதிர்த்து தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது வன்முறையாக மாறியுள்ளன.

இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.