கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்திடமிருந்து விடுவிக்க வலியுறுத்தல்!

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும்.  உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் அக் காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா   நிரோஷ்   வலியுறுத்தினார்.

இராணுவத்தினரால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் விடயத்தில்,  19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – சுவிகரிப்பு தொடர்பான தற்போதைய நிலை அரச காணி (03.09.2014) இராணுவத்தினருக்குக் கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என  செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற கோப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்விடயத்தில் குறுக்கிட்டு பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்   நிரோஷ் , மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினருக்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை நாம் புதிதாக தற்போதே கேள்விப்படுகின்றோம்.

அது முன்னைய காலங்களில் இடம்பெற்றதாக தங்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த இரகசிய தகவலை நாம் அறியும் நிலையில், நாம் அதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.

துயிலும் இல்லத்தில் எமது உறவுகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு மரணித்தவர்களை நினைவு கொள்ளும் உரிமை, அஞ்சலிக்கும் உரிமை எமது உறவுகளுக்கு கிட்டவேண்டும்.

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, இது 2014 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து குறுக்கிட்ட தவிசாளர் 2014 ஆம் ஆண்டு எந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டிருக்கின்றது? காணி கையளிப்பு சட்டங்கள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, மாவீரர் துயிலும் இல்ல நிலங்களை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். அது நடக்கும் என்றார். இராணுவம் இருக்கின்ற பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் என்றார்.