அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலவசக் கல்வியைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் புதன்கிழமை (14) பிற்பகல் கொழும்பு புறகோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஏழைகள் கல்வியை விட்டு அகற்றப்படுவதா மறுமலர்ச்சி?, என்.பி.பி முத்திரையில் எடுத்து வரும் ரணில் – கோட்டா கல்வி கொள்கையைத் தோற்கடிப்போம், இலவசக் கல்வியைப் புதைக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் மற்றும் பிக்குகள் இதில் கலந்துகொண்டனர்.
இலவசக் கல்வியின் மரணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கறுப்பு நிறப் பெட்டியொன்றைச் சுமந்து வந்த போராட்டக்காரர்கள், புதிய பாடத்திட்டங்கள் மாணவர்களைக் கல்வியிலிருந்து அந்நியப்படுத்துவதாகக் கோஷமிட்டனர். ‘சுதந்திரக் கல்விக்காக மாணவ மக்கள் இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தினால் கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பாதுகாப்பு மற்றும் ஆர்பாட்டக் காரர்கள் முன்னோக்கி செல்வதை தடுப்பதற்காகவும் பொலிஸாரும் இரானுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.



