இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான விசேட அறிவுறுத்தல் ஒன்றை அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான தகவல்களால் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய இராணுவம் தயாராக இருப்பதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2025 ஜூன் மாதம் ஈரானால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின் போது, இஸ்ரேலிய பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்ததால் எந்தவொரு இலங்கையருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்பதை தூதரகம் நினைவூட்டியுள்ளது.

அவசரகால ஏவுகணைத் தாக்குதல்கள் அல்லது பயங்கரவாதச் செயல்கள் இடம்பெறும் பட்சத்தில், இலங்கையர்கள் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ள வழிகாட்டல்கள் வருமாறு:

இஸ்ரேலிய ஊடகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொள்பவர்கள், அவசர காலத்திற்காக அவற்றை எப்போதும் தம்வசம் வைத்திருக்க வேண்டும்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ அல்லது இணையத் தொடர்பு முடங்கினாலோ இலங்கையிலுள்ள உறவினர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திறந்த வெளிகளில் பணியாற்றுவோர், அபாய எச்சரிக்கை சிக்னல்  ஒலித்தவுடன் உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

வாகனங்களில் பயணிக்கும் போது இவ்வாறான சூழல் ஏற்பட்டால், வாகனத்தை நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும்.

எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளோர் தற்போதைய நிலவரம் குறித்துக் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை  (15) தைப்பொங்கல் தினம் என்பதாலும், நாளை மற்றும் நாளை மறுதினம் வார இறுதி விடுமுறை என்பதாலும் தூதரகம் மூடப்பட்டிருக்கும்.

இருப்பினும், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் அவசர சேவைகளுக்காகத் தூதரகம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரானில் உள்ள இந்தியப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதுடன், தோஹாவிலுள்ள அமெரிக்கத் தளம் மற்றும் விமானப் போக்குவரத்துக்களிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.