இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், சர்வதேச சட்டங்களை மிக மோசமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதித்துறை ரீதியாக உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மோதல்கள் தொடர்பான பாலியல் துன்புறுத்தல்கள் இப்போதும் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவுமா மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய கொடுமைகளை எதிர்கொள்பவர்கள், சமூகச் சூழல் மற்றும் அச்சம் காரணமாக அவற்றை வெளியே சொல்ல முடியாமல் அமைதியாகச் சகித்துக்கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்களைக் கையாள்வதற்கு இலங்கையில் வலுவான மற்றும் முறையான சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பதையே அரசாங்கம் தனது முதன்மையான இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.



