சட்டபூர்வமான, பேண்தகு நடைமுறைகளை மீனவ சமூகம் பின்பற்ற வலியுறுத்தல்!

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையின் பேண்தகுதன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) ஒரு முக்கிய கொள்கை ரீதியான தீர்மானத்தை அறிவித்துள்ளது.

அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல், வெளிநாட்டு கடல் எல்லைகளைச் சட்டவிரோதமாக மீறும் அல்லது படகுகள் கண்காணிப்பு அமைப்பை (VMS) வேண்டுமென்றே செயலிழக்கச் செய்யும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்.

எந்தவொரு படகோட்டி மற்றும் முழுப் பணியாளர்களுக்கும், சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் விதிக்கப்படக்கூடிய ஆறு மாத காலக் கடுமையான மீன்பிடித் தடையை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்க்கமான நடவடிக்கையானது, சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளதுடன், இதன் மூலம் நாட்டின் கடல் வளங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான கடல் உணவு ஏற்றுமதிச் சந்தை ஆகியவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் குறைப்பதை நோக்காகக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்,  சுசந்த கஹவத்த, இந்த நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார்.