மலையக தமிழர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அநுர அரசு முற்படுகிறதா? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவரது பதிவு வருமாறு,
இலங்கை கஷ்டங்களில் விழும் போதெல்லாம், இந்தியா தான் எப்போதும் வேறு எவரையும் விட அதிகம் உதவி செய்கிறது. நன்றி இந்தியா.
ஆனால், இந்த காரணத்தால், இந்த முறை மண் சரிவால் அதிகம் பாதிக்க பட்ட மலையக தமிழ் பெருந்தோட்ட மக்களை இந்தியாவிடம் தள்ளி விட, அனுர அரசு முயல்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அப்படியானால், மலையக தமிழ் மக்கள் இலங்கை பிரஜைகள் இல்லையா? அவர்கள் இந்திய வம்சாவளியாக இருக்கலாம். ஆனால், இலங்கை குடிமக்கள் என்பதை இலங்கை அரசாங்கம் மறக்க கூடாது.
பாதிக்க பட்ட சிங்கள மக்களுக்கு அரசாங்கம், காணி கொடுத்து, ஐம்பது (50) இலட்ச ரூபா செலவில் வீடு கட்டி கொடுக்கிறது. இதை மனதார வரவேற்கிறோம். ஆனால், மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களை இந்தியா பார்த்து கொள்ள வேண்டுமாம். இது என்ன நியாயம்?
அப்படியே ஏதாவது செய்தாலும், இலங்கை அரசு, மலையக தமிழ் மக்களுக்கு இன்று என்ன செய்ய முயல்கிறது?
மலைநாட்டு தமிழ் மக்களுக்கு, “காணி-மண் உரிமையை மறுத்து”, கொழும்பில் கட்டுவது போன்று தொடர்மாடி வீடுகளை மலைகளில் கட்டி தர அரசாங்கம் இரகசிய திட்டம் போடுகிறது.
பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இப்படி திட்டம் போடுகிறார். இவர் போன வருடமே இதை செய்ய முயன்றார்.
“தோழர் சமந்த, இதை செய்ய வேண்டாம்” என நான் இவருக்கு பாராளுமன்றத்தில் தெளிவாக எடுத்து கூறினேன். “சரி, சரி, மனோ கணேசன், இந்த வருடம் நாம் மலைநாட்டில் தொடர்மாடி வீடுகள் கட்ட மாட்டோம், தனி வீடுகள் தான் கட்டுவோம்” என சமாளித்து எனக்கு இவர் பதில் கூறினார். இது பாராளுமன்ற ஹன்சார்டில் இருக்கிறது.
ஆனால், போன வருடம், இவர் எந்த ஒரு வீடுமே மலைநாட்டில் கட்டவில்லை. தனது தொகுதி பதுளை மாவட்டத்துக்கு,
ஜனாதிபதியையும் அழைத்து வந்து, பெரிய விழா நடத்தி, எல்லோருமாக சேர்ந்து, அப்பாவி மக்களை, கட்டி பிடித்து “ஷோ” காட்டி, “வீடு கட்டி தருகிறோம்” என்ற வெறும் கடிதங்களை தான் கொடுத்து சமாளித்து அனுப்பி வைத்தார்கள்.
இப்போது இந்த அமைச்சர் மீண்டும் தொடர்மாடி கதையை தந்திரமாக முன்னெடுக்க முயல்கிறார். அரசாங்கத்துக்கு நல்லெண்ணத்துடன் ஒரு ஆலோசனை கூறுகிறேன்.
“தொடர்மாடி வீடுகளை, கொழும்பு போன்ற மாநகரங்களில் கட்டுங்கள். கண்டி, நுவரேலியா போன்ற மலையக மாநகரங்களில் கூட, மாநகர தொழிலாளருக்கு கட்டி கொடுங்கள். ஆனால், பெருந்தோட்டங்களில் வேண்டாம். மலைநாட்டில், இந்த தித்வா பேரழிவில்,
இதுவரை, சுமார் 4,000 மண் சரிவுகள் நிகழ்ந்து உள்ளன என, ஆர்த்தர்-சி-கிளார்க் விஞ்ஞான ஆய்வு நிலைய அறிக்கை மிக தெளிவாக எச்சரித்து கூறி உள்ளது. இந்நிலையில் மலைநாட்டில், மலை மேல் தொடர்மாடி வீடுகள் என்பது அபாயகரமான திட்டம் அல்லவா? மலையக மக்களை சட்டியில் இருந்து அடுப்பில் தள்ளும் காரியம் அல்லவா? இது என்ன நியாயம்?’
இதை நான் இப்போது பொது வெளியில் கூறுகிறேன். உடனே, தற்குறிகள், போலி கணக்கு காவடிகள், என்னை விமர்சிப்பார்கள். இவர்களை நான் பொருட்டுக்கும் கணக்கில் எடுப்பதில்லை.
ஆனால், இந்த அரசை இன்னமும் நம்பி கொண்டு இருக்கும் தோழர்கள், அனுர அரசிடம் என் கேள்விகளுக்கு பதில் பெற முயல வேண்டும்.
நல்ல பதில் கிடைத்தால் நல்லது தானே? நாளை பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவோம். “வலி அல்ல, வழி” பிறந்தால் நல்லது தானே. அனைவருக்கும் வாழ்த்துகள்.



