புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார்!

WhatsApp Image 2026 01 13 at 18.23.04 புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார்!

அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும்  சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வித் துறை தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்ட முறையான பொறிமுறையின் மேற்பார்வையின் கீழ் அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கல்வி மறுசீரமைப்புகளை வெற்றிகரமாக்குவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தியாவசியமானது என்றும், சந்தேகம் அல்லது அவநம்பிக்கையுடன் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய கல்வி மறுசீரமைப்புகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.