டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று செவ்வாய்க்கிழமை (13) அறிவித்துள்ளது.
இதன் மூலம் டித்வா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்கா வழங்கிய மொத்த உதவிகளின் பெறுமதி 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புயல் கரையைக் கடந்து 72 மணித்தியாலங்களிற்குள் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களின் தொடர்ச்சியாக இப்புதிய நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மிகச்சரியான நேரத்தில், செயற்திறனுடைய உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“இலங்கையர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது அமெரிக்கா உதவி செய்தது.” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். “போர்த் திணைக்களம் வழங்கிய வான் போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் நிபுணத்துவங்கள் முதல் மனிதாபிமான உதவியாக வழங்கப்பட்ட 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒரு முக்கியமான இந்தோ-பசிபிக் பங்காளரான இலங்கை, டித்வா புயலின் தாக்கங்களிலிருந்து மீட்சியடைந்து முன்னோக்கிச் செல்வதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்றார்.


