செம்மணி படுகொலை விவகாரத்தில் இழப்பீடு வழங்கி உண்மைகளை மறைக்க முயற்சி: சோமரத்ன ராஜபக்ஷ குற்றச்சாட்டு

செம்மணி படுகொலை விவகாரத்தை விரிவான விசாரணை இன்றி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி முடிவுக்குக் கொண்டுவர காணாமல்போனோர் அலுவலகம் முயற்சிப்பதாகக் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தன்னைக் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த குறித்த அலுவலக அதிகாரிகள் மற்றும் அதன் தலைவரின் கருத்துக்களின் அடிப்படையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

செம்மணி படுகொலைகள் மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பாகத் தான் ஏற்கனவே பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ள போதிலும், அதிகாரிகள் அது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு மட்டும் நட்டஈடு வழங்கிவிட்டு, இந்த விவகாரத்தைக் கைகழுவி விடுவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரைச் சீர்செய்ய அரசாங்கம் முயல்வதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதியன்று இது தொடர்பாகக் கடிதம் ஒன்றையும், பின்னர் ஒக்டோபர் 4 ஆம் திகதி அன்று தனது சட்டத்தரணி ஊடாகச் சத்தியக்கடதாசி ஒன்றையும் சோமரத்ன ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

அதில் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

சோமரத்னவின் மனைவி எஸ்.சி.விஜயவிக்ரம ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், தனது கணவர் வழங்கிய ஆதாரங்களையும் உண்மைகளையும் புறந்தள்ளிவிட்டு, இந்த விவகாரத்தை அவசர அவசரமாக முடிக்கவே அரசாங்கம் திட்டமிடுவதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.