யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என எவரும் கூறவில்லை என்றும், விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காணி விடுவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகக் கூறப்படும் தகவல்களை மறுத்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அடுத்த கட்டக் கலந்துரையாடல் பெரும்பாலும் அடுத்த மாதம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இது தொடர்பாக புத்தசாசன, கடற்றொழில் அமைச்சர்கள் மற்றும் விகாரையின் தேரர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
விகாரைக்குத் தேவையான காணி மட்டும் அளவீடு செய்யப்பட்டு, எஞ்சிய மக்களின் காணிகளை உரிய நடைமுறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதில் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி உறுதியுடன் இருப்பதாக நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விகாரைக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிலப்பரப்பைத் துல்லியமாக அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அளவீட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் உரிய முறையில் கையளிக்கப்படும்.
இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சு விரைவில் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடும் என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.



