திருகோணமலை மாநகரசபை நடவடிக்கைக்கு எதிராக வர்த்தக சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

cd7e6120 ffaf 46d4 9a0c 575b828c43ef திருகோணமலை மாநகரசபை நடவடிக்கைக்கு எதிராக வர்த்தக சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் திங்கட்கிழமை (12) காலை மாநகரசபையின் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து மாநகரசபை வரை பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று மாநகரசபையின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது “வீதியோர வியாபாரிகளை தடைசெய்”, “வெளி ஊர் தற்காலிக வியாபாரிகளை நிறுத்து”, உள்ளுர் வர்த்தகம் உள்ளுர் வளர்ச்சி”, “தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் மாநகசபையின் முதல்வருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வர்த்தக சங்க குழுவினர் சிலர் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத்தினர், தற்போது குறித்த நிறுவனங்களிடம் கட்டணங்கள் பெறப்பட்டு முறையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதால் அதன் அனுமதியை இரத்து செய்ய முடியாதுள்ளதாகவும், எதிர்காலத்தில் வர்த்தக சங்கத்தை பாதிக்காத வகையில் அனுமதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சாதகமான முறையில் மாநகரசபையின் முதல்வர் பதில் வழங்கியதாகவும் அதேபோன்று நகரசபையின் வருமானம், பணிபுரிகின்ற ஊழியர்களின் சம்பளம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்ததாகவும் வர்த்தக சங்க பிரதிநிதி புர்ஹான் தெரிவித்தார்.