அதிகாரத்தை தக்கவைக்கும் அநுர அரசாங்கத்தின் தந்திரம் : விதுரன் 

வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி இராணுவத் தலையீடும், அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டதும் உலக அரசியல் அரங்கில் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் ஒரு நாட்டின் இறையாண்மை என்பது நவீன சர்வதேச ஒழுங்கில் எந்தளவுக்குப் பலவீன மாகியுள்ளது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. வெனிசுலா ஜனாதிபதியை அவரது நாட்டிற்குள்ளேயே வைத்துச் சிறைப்பிடித்தஅமெரிக்காவின் செயல், சர்வதேச சட்டங்களின் அடிப்படை அத்திவாரத்தையே அசைத்துப் பார்த்துள்ளது.
இதுவெறும் நிக்கோலஸ் மதுரோ என்ற தனிநபருக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல மாறாக, லத்தீன் அமெரிக்காவில்மீண்டெழும் இடதுசாரி செல் வாக்கை ஒடுக்குவதற்கும், அந்த நாட்டின் பரந்துபட்ட எண்ணெய் வளங்களை டொலர்கள்மூலமான வர்த்தகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மான மூலோபாய நகர்வாகும்.
இந்த முன்னுதாரணமானது கியூபா, ஈரான் போன்ற நாடுகளுக்கும், ஏன் அமெரிக்காவுடன் முரண்படும் எந்தவொரு நாட்டுக்கும்நாளை நிகழலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த பாணியை ரஷ்யாவோ அல்லது சீனாவோ தனதுஅண்டை நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றத் தொடங்கினால், அது உலகளாவிய அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்பதில்மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
நவீன யுகத்தில் ஒரு நாட்டின் தலைவரைக் கைப்பற்றி அல்லது அழித்து அதிகாரத்தை நிலைநிறுத்தும் இத்தகைய போக்கு, ஜனநாயக விழுமியங்களுக்கு விடப்பட்ட நேரடிச் சவாலாகும். இது சீனாவின் பொருளாதாரப் பாய்ச் சலைத் தடுப்பதற்கும், அமெரிக்க மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குமான ஒரு நீண்டகால பூகோள அரசியல் மூலோபாயத் திட்டத்தின் ஒருபகுதியாகும்.
இவ்வாறான பின்னணியில், இலங்கையைப் பொறுத்தவரை, ஜே.வி.பி.  தலைமையிலான ஆட்சி உரு வானபோது, அதுஅமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடு களுக்குச் சவாலாக அமையும் என்றே பரவலாக எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அநுர அரசாங்கம் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் மிக இணக்கமான உறவைப் பேணத்தொடங்கியது. இது பல இடதுசாரி ஆதரவாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், வெனிசுலா விவகாரம்அந்த சந்தேகங்களுக்கு தெளிவான விடையைக் கொடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு பிரதிபலிப்பது என்பது தொடர்பில்தடுமாறி நீண்ட மௌனம் காத்தபோது, அந்த மௌனத்தை முதலில் உடைத்தது ஜே.வி.பி. தான். ஜே.வி.பியின் நிறைவேற்றுக் குழு அறிக்கை யொன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,  அமெரிக் காவை மிகக்கடுமையாகச் சாடியிருந்தது. அமெரிக்காவின் நடவடிக்கையை ‘இறையாண்மை மீதான ஆக்கிரமிப்பு’ என்று வர்ணித்தஅக்கட்சி, நவீன சமூகமும் ஆட்சியும் நாகரீகமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு வகுப்பெடுத்திருந்தது.
ஒரு நாட்டின் இறையாண்மையை மீற எந்த வல்ல ரசுக்கும் உரிமை இல்லை என்றும், வெனிசுலா மக்களுடன் தாங்கள்உறுதியாக நிற்பதாகவும் ஜே.வி.பி. பகிரங்கமாகவே அறிவித்தது. இந்த அறிவிப்புக்களின் போது அக்கட்சி அமெரிக்கா பற்றிகிஞ்சித்தும் சிந்தித்துப்பார்க்கவில்லை. இருப்பினும், இதேகட்சியின் பிரசார செயலா ளராகவும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகவும் இருக்கும் விஜிதஹேரத்தின் வெளிப்பாடு முற்றிலும் மாறு பட்டதாக இருந்தது.
அவரது வெளிப்பாடு அதிகமாக ஜனநாயகத்தை மையப்படுத்திய  சொல்லாடல்களையும், சர்வதேச சட்டங்கள், ஐ.நா.உடன்பாடுகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியதாக வும் இருந்தது. உள்நாட்டில் நிகழ்ந்தேறிய மனித உரிமைகள், மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச உடன்பாடுகளையோ, சட்டங்களையே கவனத்தில் கொள் ளாத தரப்பொன்று வெனிசுலா விடயத்தை குறைந்த பட்ச மேனும் கவனத்தில்கொண்டிருப்பது ஆச்சரிய மூட்டுவதாக இருக்கிறது.
அதுவொருபுறமிருக்கையில், ஜே.வி.பியின் வெளி ப்பாடுக்கும், அதேகட்சியின் முக்கியஸ்தராகவும் நாட்டின் வெளிவிவகாரஅமைச்சராகவும் இருக்கும் விஜித ஹேரத் தின் வெளிப்பாட்டுக்கும் இடையில் வேறுபாடுகள் தாரள மாகவே இருந்தன. அந்த வேறுபாடுகளை ‘அரசியல் கட்சியின் நிலைப்பாடு வேறு, அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறு’ என்று விஜித ஹேரத்அர்த்தம்கற்பித்து வழங்கிய விளக்கம், இராஜதந்திர ரீதியாகத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியா கும்.
அதுமட்டுமன்றி, ஜே.வி.பியின் மத்தியகுழு, தலை மைக்குழு, முக்கிய தீர்மானங்களை எடுக்கும் ‘டீம் 6’ ஆகிய வற்றில் அங்கம்வகிக்கும் விஜித ஹேரத் கட்சி ரீதியாக ஒரு நிலைப்பாட்டையும், அரசாங்க ரீதியாக பிறிதொரு நிலைப்பாட்டையும் எவ்வாறுவெளிப்படுத்த முடியும். அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
தேசிய மக்கள் சக்தி என்ற போர்வைக்குள் இருந்து கொண்டிருப்பதால் இவ்வாறான இரட்டை முகங்களை இலகுவாககாண்பிக்க முடியும். அவ்வாறு தான் கடந்த காலங்களில் முக்கிய தருணங்களில் அநுர அரசாங்கம் நடந்துகொண்டது. ஆனால் வெனிசுலா விடயத்தில் அந்த மூலோபாயம் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி விட்டது
அதேவேளை, வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட உத்தியோக பூர்வமான அறிக்கையில் ‘அமெரிக்கா’ என்ற பெயரோஅல்லது ‘மதுரோ’ என்ற பெயரோ இடம்பெற வில்லை என்பது மிகவும் அவதானிக்கவொரு விடயமாகும். இந்த விடயம் அரசாங்கம் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அநுர அரசாங்கத்தின் அந்தத் தயக்கத்திற்குப் பின்னால் வலுவான பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி அச்சுறுத்தல்களில் இருந்து இலங்கை இன்னும் முழுமை யாகவிடுபடவில்லை.
இலங்கைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 44 சதவீத இறக்குமதி வரி 20 சதவீதமாகக் குறைக் கப்பட்டிருந்தாலும், அதுஇன்னும் ஒரு நிரந்தர உடன் படிக்கையாக உறுதி செய்யப்படவில்லை.
இத்தகைய சூழலில், ட்ரம்ப்பை நேரடியாகப் பகைத்துக் கொள்வது இலங்கையின் ஏற்றுமதித் துறையைச் சிதைத்து, மீண்டுவரும் பொருளாதாரத்தைப் பாதாளத்தில் தள்ளிவிடுமென அநுர அரசாங்கம் அஞ்சுகிறது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்காவின் முதலீடுகளை ஈர்க்கவும்இலங்கை பாடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில், இடதுசாரிக் கொள்கைக்காக அமெரிக்காவை எதிர்ப்பது தற்கொலைக்குச்சமமானது என்று அரசாங்கம் கருதுகிறது.
இதனால்தான், ஜே.வி.பி. என்ற கட்சி தனது கொள்கை அடையாளத்தைப் பேணிக் கொள்ள அமெரிக்காவை எதிர்க்கிறது. ஆனால் அரசாங்கம் தனது பிழைப்புக்காகவும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான நாட்டின் பொருளாதாரநலனுக்காகவும் அமெரிக்காவுடன் இணங்கிப் போகிறது. இது கொள்கை உறுதியற்ற சுயலாப அரசியலின் வெளிப்பாடாகும்.
அரசாங்கத்தின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு என்பது கொள்கைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான விடயமாகும். அதாவது, ஒருபுறம் தனது இடதுசாரி வேர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயமும் மறுபுறம் அமெரிக்காவின் வரிஅச்சுறுத்தல் மற்றும் பொரு ளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
இந்த இரண்டுக்கும் இடையே அநுர அரசாங்கம் மெல்லிய நூலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அது ஒட்டுமொத்தநாட்டுக்குமே ஆபத்தானது. நவீன பூகோள ஒழுங்கில் பிராந்திய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.  மற்றொருபுறம், அநுர அரசாங்கம் ‘ஒரே சீனக் கொள்கை’யை ( One china policy) ஆதரிப்பதாகத் திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. இது சீனாவுடன் ஜே.வி.பிக்கு காணப்படும் நெருக்கத்தையும் ஆட்சிக்கான ஆதர வைத்தக்கவைத்துக்கொள்வதற்காகவும் எடுக்கப்பட்ட  முக்கி யமானதொரு நகர்வாகும் என்பது வெளிப்படையானது.
ஆனால், சீனா தாய்வானை சீண்டிக்கொண்டிருக் கையில் அநுர அரசாங்கம் அதனை எதிர்க்கவில்லை. இறையாண்மை மீதானசீண்டலாக கருதவில்லை. ஜன நாயகத்தின் மீதான அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. ஆகக் குறைந்தது ஒரு கரிசனையை வெளிப்படுத்திய அறிக் கையைக் கூட வெளியிடவில்லை. எதிர்காலத்திலும் அது நடைபெறப்போவதில்லை.
ஆகவே அநுர அரசாங்கத்தின் இத்தகையை செயற்பாடுகளும், பிரதிபலிப்புக்களும் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில்ஆட்சியைக் கைப்பற்றினாலும், ஜே.வி.பியின் அடிப்படைக் கொள்கைகள் இன்னும் மாறவில்லை என்பது மிகத்தெளிவாகஉறுதிப்படுத்தப்படுவதாக உள்ளது.
ஜே.வி.பியினர் ஆட்சி அதிகாரத்திற்காக ‘மாறு வேடம்’ போட்டிருந்தாலும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது தங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலையை வெளிப் படுத்தத் தயங்குவதில்லை. கூடவே அது சிங்களமைய வாதத் தையும் உள்ளீர்த்தும்கொள்கின்றமையானது அதீத உணர்வுபூர்வமானதாக உருவெடுக்கும் சூழலைக் கொண் டிருக்கின்றது,
மேலும் ஜே.வி.பி பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க எதிர்ப்பு போக்கு, வரும் காலங்களில் இலங் கையின்வெளியுறவுக் கொள்கையில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தும். ட்ரம்ப் நிர்வாகம் ஜே.வி.பியின் இந்த அறிக்கைகளை எப்படிக்கையாளப் போகிறது? இது இலங்கையின் வரிச் சலுகைகளைப் பாதிக்குமா? என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.
அந்த வகையில் தற்போதைய சூழலில் அரசாங் கத்தின் முதன்மை இலக்காக உள்ளது கொள்கை ரீதியான நேர்மையை விட, அதிகாரத்தைக் காப்பாற்றும் இராஜ தந்திரமே என்பது மட்டும் திண்ணம்.