தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள கருத்தை நம்ப முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகம் முன்னணியின் தலைவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் என்றும், மக்களை ஒருபோதும் ஏமாற்றாது என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையிலும், தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு முக்கிய வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
குறிப்பாக, பல விவகாரங்களில் மெத்தனப் போக்கையே கடைபிடிக்கிறது.
முப்படைகளின் தளபதியாக இருக்கும் ஜனாதிபதியால் மிக எளிதாகக் காணிகளை விடுவிக்க முடியும். ஆனால், வடக்கு-கிழக்கில் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி எந்தக் காணிகளும் விடுவிக்கப்படவில்லை.
அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்குவதாகக் கூறிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அதேநேரம் கடந்த ஓராண்டு காலத்தில் அரசியல் தீர்வு குறித்து எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் இந்த அரசாங்கம் முன்வைக்கவில்லை.”
மேலும் “13-வது திருத்தச் சட்டம் நீக்கப்படும் என இவர்கள் கூறுகிறார்கள். அப்படியாயின் அதற்கு மாற்றாக முன்வைக்கப்படப் போவது என்ன? சமஷ்டியா அல்லது வேறு ஏதேனும் அதிகாரப் பகிர்வு முறையா? இது குறித்து ஜனாதிபதி அநுரகுமாரவோ அல்லது கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவோ இதுவரை வாய் திறக்கவில்லை” என சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
முந்தைய அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கமும் தமிழ் மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், அரசாங்கம் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமானால், வெறும் பேச்சோடு நிற்காமல் செயலில் காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



