வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்துத் தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (05) திகதியிடப்பட்டு குறித்த கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் வரலாற்று தொன்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்துத் தர ஆவண செய்யுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான கோரிக்கையினை ஏற்கனவே விடுத்துள்ளதாகவும் எனினும் எதுவித திருப்திகரமான பதிலும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு விடுவித்துத் தரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியும் என வவுனியா வடக்கு பிரதேச சபையினரும் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து குறித்த வரலாற்று தொன்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிக விரைவில் விடுவித்துத் தர ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.



