2026ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரை வெறும் நாட்காட்டி மாற்றமல்ல பொதுப்படையில் அதுவொரு தேசத்தின் எதிர்காலம் குறித்த மிக வரலாற்று மைல் கற்கள் நிறைந்ததாகும். தமிழர்களைப் பொறுத்தவரையில் அபிலாசைகளை அடைவதற்கான 7தசாப்தப் பயணம் நீளப்போகின்றமைக்கு அப்பால் அன்றாட வாழ்க்கையில் தற்காப்பு போராட்டங்களுக்கு தள்ளப்படும் நிலைமைகள் தீவிரமாகப்போகின்றன.
2022இல் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்தினால் ஏற்பட்ட வடுக்கள் ஆறாமல் இருக்கின்றது. 2023இல் அரகல மக்கள் எழுச்சியின் ஏக்கங்கள் நிறைவேறாது நீடிக்கின்றன. 2024 இல் முறைமை மாற்றதை நோக்கிய திரண்ட அரசியல் மாற்றமும் புதிய நம்பிக்கையும் மெல்ல மெல்ல கலைய ஆரம்பித்திருக்கின்றது. 2025இன் இறுதியில் ‘தித்வா’ புயல் ஏற்படுத்திய பேரழிவு புதிய நெருக்கடிகளை தோற்று வித்திருக்கின்றன.
இந்தச் சூழலானது இலங்கையில் ‘நிச்சயமற்ற நிலைத்தன்மையை’ ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமை யிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாவது ஆண்டில் பயணத்தை ஆரம்பிக்கிறது. அந்த அரசாங்கத்தின் மீதான அதியுச்ச எதிர்பார்ப்பாக இருக்கும் ‘முறைமை மாற்றம்’ என்ற கோசத்தை நடைமுறைச் சாத்தியமாக்குவதாக இருந்தால் இந்த ஆண்டில் நிர்வாக மாற்றம் ஏற்பட வேண்டிய கட்டாய சூழல் உருவெடுத்திருக்கிறது.
அந்த வகையில் பார்க்கின்றபோது அநுர அர சாங்கத்துக்கு நிர்வாக மாற்றம் என்பது அரசியல் ரீதியான அக்னிப் பரீட்சையாக இருக்கப்போகிறது. அதுமட்டுமன்றி ஜே.வி.பி. தலைமையில் செயற்படும் இந்த அரசாங்கத்திற்கு போராட்ட இயக்கத்திலிருந்து முதிர்ந்த நிர்வாக அமைப்பாக மாறுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகவும் இது அமையப் போகிற்து.
ஆட்சியாளர்களுக்கு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த ஆரம்பகாலத்தில் இருந்த ஊழல் எதிர்ப்புக்கான சிந்த னைகள் இப்போது மெல்லமெல்லத் தணிந்து விட்டது. அவ்வப்போது நடைபெறுகின்ற கைதுகள் வெறுமனே திசை திருப்பல்களுக்காகவும், பழிவாங்கல்களுக்காகவும் என்ற பார்வை மக்கள் மத்தியில் வேரூன்ற ஆரம்பித்துள்ளது.
அதுமட்டுமன்றி, ஆளும் தேசிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்கள் இலங்கையின் வழக்கமான அரசியல் கலாசாரத்துக்குள் கரைந்துவிடுகின்ற போக்கு வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது. இதனால் இலஞ்சம், ஊழல்கள் ஆகியவற்றுக்கு எதிரான செயற்பாடுகளை கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக எடுப்பதற்கு முன்னதாக தங்களுடைய சகபாடிகளை கட்டுப்படுத்த வேண்டிய கடின மான சூழலொன்று புதிய ஆண்டில் தோன்றியுள்ளது.
தென்னிலங்கையின் சிங்களக் கிராமப்புறங்களி லும், வடக்கு-கிழக்கின் சிறுபான்மைச் சமூகங்களிலும் தேசிய மக்கள் சக்தியின் ‘கிளீன் சிறிலங்கா’ ‘பிரஜா சக்தி’ போன்ற திட்டங்களின் ஊடாக நடைபெறுகின்ற ஜே.வி.பியை கீழ் மட்டத்துக்கு ஊருவச் செய்யும் அல்லது கட்சிக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் செயற்பாடுகள் இந்த ஆண்டில் அதியுச்சமடையும் நிலைமைகளே காணப்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான விவாதங்கள் அரசியல் தளத்தில் முக்கிய பேசுபொருளாக அமையப்போகின்றது. ஏனென்றால் ஒருபுறம் பொருளாதார மீட்சிக்கு வலுவான அதிகாரம் தேவை என்ற வாதமும், மறுபுறம் சர்வாதிகாரத்தைத் தடுக்க அதை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் 2026 இன் அரசியல் களத்தை மையங்கொள்ளவுள்ளன.
அதேபோன்று, புதிய அரசியலமைப்புக்கான உரை யாடல்களும், மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றிய வாதப்பிரதிவாதங்களும் மேலெழவுள்ளன. இந்த இரண்டு விடயங்களுமே குறிப்பாக தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பவையாக இருக்கின் றன.
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற தமிழ்க் கட்சிகளின் கோசமானது, அதிகாரப்பகிர்வுடனான தன்னாட்சிக் கோரிக்கைக்கு புதிய சவால்களை தோற்றுவித்துள்ளது. இந்தப் புரிதல் இன்னமும் தமிழ் கட்சிகளுக்கு தெளிவாக ஏற்படாத நிலையில் இந்த ஆண்டிலாவது அதுபற்றிய புரிதல்
ஏற்படுமா என்பது எதிர் பார்ப்புக்கள் நிறைந்ததாக உள்ளது.
அதுமட்டுமன்றி, மாகாண சபை தேர்தலையும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகியவற்றை மையப் படுத்தி தமிழ் கட்சிகள் தமக்குள் நடத்துகின்ற முட்டி மோதல்கள் இந்த ஆண்டிலும் தொடரப்போகின்ற நிலை யில் தென்னிலங்கையின் சிங்கள, பௌத்த மையவாத அரசியலுக்கு அவை தீனிபோடுவதாகவே இருக்கப்போகி றது.
தாயகத்தைப் பொறுத்தவரையில் உரிமைக்கும் உயிர்வாழ்வுக்கும் இடையிலான போராட்டம் 2026ஆம் ஆண்லும் நீளப்போகின்றது. பாரம்பரிய தமிழ் அரசியலின் அரசியல் கலாசாரங்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும், சலிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழ்த் தேசிய சிதைப்பு வேகமாக வளர்ந்து வரும் ஆபத் தான சூழல் உருவெடுக்கப்போகின்றது.
குறிப்பாக, தமிழ் தலைமைகளுக்கும், மக்களுக் கும் இடையிலான உரையாடல் வெளியொன்று உரு வாக்கப்பட வேண்டியதும், அன்றாட உயிர்வாழ்வுக்கான உறுதிப்படுத்தலுக்கான பொதுத்தளமொன்றை ஏற்படுத்த வேண்டியதும் இந்த ஆண்டில் மிகவும் முக்கியமான விடயங்களாக உள்ளன.
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்து க்கு அப்பால் போரால் பாதிக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு என்பது ஆக்கிரமிப்புக்கள், அடக்கு முறைகள் என்பனவற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கைச் செயற்பாடுகளுடன் அண்மைய காலத்தில் பிணைக் கப்பட்டுள்ள காலநிலை மாற்றத்தல் ஏற்படும் இயற்கை விளைவுகளில் இருந்து மீண்டெழுவதற்கான தாங்குதிறன் ஆகியவற்றை மையப்படுத்தியதாக உள்ளது.
தொடர்கதையாக இருக்கும் காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள், செம்மணி உட்பட மனிதப்புதைகுழிகள் விவகாரம், பௌத்த ஆக்கிரமிப்புக்கள் மற்றும் நில உரிமைப் போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கிவுல் ஓயா, மகாவலி மற்றும் பல புதிய திட்டங்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய சூழல் இந்தாண்டில் உருவெடுக்கப்போகின்றது.
தென்னிலங்கையில், எதிர்க்கட்சிகளின் ஒன்றி ணைவு ரணில் தலைமையிலானதா இல்லை சஜித் தலை மையிலானதா என்ற பனிப்போர் தொடரவுள்ள நிலையில், நாமல் மீண்டும் தலையெடுப்பதற்காக தீவிரமான முயற்சிகளில் ஈடுபடவுள்ளார். அதுமட்டுமன்றி ரணிலின் வியூங்களில் மட்டுமே அதிதீத நம்பிக்கை வைத்துள்ள எதிரணியின் தலைவர்கள் பொருளாதார ரீதியாக ஏற் படப்போகின்ற நெருக்கடிகளை வைத்து அதியுச்ச நன் மைகளை அடையலாம்.
இதேநேரம், பொருளாதார ரீதியாக, இலங்கை ஒரு மெல்லிய நூலிழையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தித்வா புயலால் ஏற்பட்ட 4.1 பில்லியன் டொலர்கள் இழப்பு, நாட்டின் மொத்த தேசிய வளர்ச்சியை 3.1சதவீத மாகக் குறைத்துள்ளது. 2026ஆம் ஆண்டிலிருந்து சர்வ தேசக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் சமூக நலத்திட்டங்களுக் குப் பெரும் சவால்கள் உருவாகியுள்ளன.
‘Public Investment Programme 2026–2030’ எனும் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், சிதைந்த பாலங்களும் வீதிகளும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வகையில் மீண்டும் கட்டப்படுகின்றன. சுற்றுலாத்துறை ‘Island of Resilience ‘ என்ற அடையாளத்துடன் உயிர்த்தெழுந்தாலும், நாட்டின் வறுமை விகிதம் இன்னும் 24சதவீதமாக நீடிப்பது அபாயகரமானது.
குறிப்பாக, நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் வரிச்சுமையாலும், ஏழை மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும் தவிக்கும் நிலை யில், 2026 இன் பொருளாதார வெற்றி என்பது புள்ளி விபரங்களில் மட்டுமல்லாது, சதாரணமான மக்களின் சமையலறைகளிலும் பிரதிபலிக்க வேண்டியது அவசிய மாகிறது. ஆனால் அதனை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை.
இவ்வாறான நிலையில், இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியலில், இலங்கை தன்னை ஒரு ‘நடுநிலைச் சமநிலையாளராக’ காண்பிக்க முனையும் முனைப்பு இந்த ஆண்டிலும் நீடிக்கப்போகிறது. ஆனால் அது வழமைக்கு மாறாக நெருப்பாற்றை கடப்பதற்கு நிகராகவே இருக்கும்.
இந்தியா எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இலங்கையின் பிரிக்க முடியாத பங்காளியாக மாறியுள்ளது என்று அறிவித்துள்ள நிலையில் திருகோணமலை எரி சக்தி மையம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மின்சார இணைப்புத் திட்டங்கள் 2026 இல் நிறைவடையும் நிலை யில் உள்ளன. இந்த நிலைமையானது, இந்தியா தனது ‘பிடி’யை அநுர அரசாங்கத்தின் மீது மேலும் வலுவாக்கும் நிலைமையை தோற்றுவித்திருக்கின்றது.
அதேநேரம், சீனா தனது மென்வலு அரசியலின் மூலம் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தினை முன்னெடுப்பதற்கும் கொழும்பு துறைமுக நகரம் வழியாக தெற்காசிய மைய வர்த்தக ஆதிக்கத்தைத் தொடர்வதற்குமான விரிவுபடுத்தல்களில் இறங்கியுள்ளது.
அத்தோடு, திபெத்துக்கு அண்மித்துள்ள ஷிசாங் தன்னாச்சி பிராந்தியத்துடன் இலங்கையை பௌத்தத்தின் பெயரால் இணைத்துக்கொள்வதற்கும் முனைகின்றது. அதுமட்டுமன்றி, ஒத்திகை நடவடிக்கையாக சீன-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஓராண்டுக்கு முன்னெடுப்பதற்கான முயற்சியை இந்த ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் சீனா தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளது.
மறுபக்கத்தில் அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் அடுத்துவரும் நாட்களில் பதவிக்கு வரவுள்ளார். இவர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நியமனத்தில் பதவிக்கு வருபவராக இருக்கையில் இவருடை சிந்தனைகளும் செயற்பாடுகளும் ட்ரம்பின் பிரதிபலிப்புக்களாகவே இருக்கப் போகின்றன. அவை நிச்சமயாக இலங்கை தீவு தேசத்தில் பல்வேறு விளைவுகளை உருவாக்கக் கூடியவையாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையைப் பெறுவதற்கு, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது. விசேடமாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. எவ்வாறாக இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் அனர்த்த நிலைமைகளை மையப்படுத்தி கிடுக்குப்பிடியின்றி வரிச்சலுகையை உறுதி செய்யும் போக்கு தான் காணப் படுகின்றது.
இவ்வாறாக பார்க்கின்றபோது 2026என்பது இலங் கையின் வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை கொண்டிருக்கப்போகின்றது. அதேபோன்று அரசியல் விசித்திரங்களையும், மக்கள் போராட்டங்களையும் தாரா ளமாகவே பார்க்க முடியும். அப்போது ஆட்சியாளர்களின் மற்றொரு முகம் வெளிப்படும். அது ஒட்டுமொத்த சமநிலை களையும் குழப்புவதாகக் கூட இருக்கலாம்



