பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நோர்வேக்கு பயணம்!

நோர்வே நாட்டுக்கு பயணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்   தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் முழுவதும் அங்கு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.

மேற்படி பயணத்தில் பங்கேற்றுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச்செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர், தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்புசார் தொடர் இனவழிப்பைத் தடுப்பதற்கு தாயகமும் புலம்பெயர் தேசமும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதன்படி இன்றைய தினம் (4) மாலை ஒஸ்லோவில் புலம்பெயர் தமிழர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ள இக்குழுவினர், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர்.

இச்சந்திப்பின்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் மற்றும் தமிழர்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளிட்ட  பல்வேறு விடயங்கள் தொடர்பிலும்ஆராயப்படவுள்ளது.