அரசியலமைப்புப்பேரவை குறித்த அமைச்சரவைப்பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கருத்து தொடர்பில் தீவிர கரிசனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியலமைப்புப்பேரவை தமக்குக் கீழ்ப்படிந்து செயற்படவேண்டும் என அரசாங்கம் நினைப்பதாகச் சுட்டிக்காட்டினர்.
அத்தோடு உரியவாறு இயங்கிவரும் கட்டமைப்புக்களை ஸ்தம்பிதமடையச்செய்யும் வகையிலான கட்டமைப்பு ரீதியான மாற்றம் அவசியமில்லை எனவும், மாறாக பிழைகளை சீரமைக்கும் வகையிலான கட்டமைப்பு மாற்றமே நாட்டுக்கு அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நால்வரின் பெயர்களும் அரசியலமைப்புப்பேரவையினால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, ‘பரிந்துரைக்கப்படுபவரை விட, பிறிதொருவர் தகுதியானவர் எனக் கூறும் உரிமை அரசியலமைப்புப்பேரவைக்கு இல்லை. அரச பொறிமுறையை சீர்குலைப்பதற்காகவே அரசியலமைப்புப்பேரவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், பரந்தளவில் சிந்தித்து செயற்படவேண்டும். அரச பொறிமுறையை சீர்குலைப்பதற்காகவே அரசியலமைப்புப்பேரவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இக்கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் இந்தக் கருத்து அரசியலமைப்புப்பேரவையை, குறிப்பாக அங்கு முன்மொழியப்படும் பரிந்துரைகளுக்கு வாக்களித்த உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் விதத்திலான நடவடிக்கையாகும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில்,
‘முக்கிய பதவிகளுக்கு ஜனாதிபதியினால் பிரேரிக்கப்படும் நபர்கள் தகுதியானவர்களா, இல்லையா எனத் தீர்மானிப்பது மாத்திரமே அரசியலமைப்புப்பேரவையின் பணி என்று அமைச்சரவைப் பேச்சாளர் கூறுவாராயின், பேரவை குறித்து அவருக்கு சரியாகத் தெரியவில்லை என்றே கருதவேண்டியிருக்கின்றது. அரசியலமைப்பின் ஊடாக எவ்வித கட்சித்தலையீடுகளுமின்றி இயலுமானவரை சுயாதீனமாக அரசியலமைப்புப்பேரவை நிறுவப்பட்டிருக்கின்றது. முக்கிய பதவிகளுக்குப் பொருத்தமான பலர் இருக்கும்போது, அவற்றுக்குப் பொருத்தமற்றவர்களை அரசாங்கம் பிரேரிக்கும் பட்சத்தில், ‘வேறு யார் பொருத்தமானவர்கள்?’ என அரசியலமைப்புப்பேரவை ஆராயக்கூடாது என்று கூறுவது ஏற்புடையதன்று என்று கூறியுள்ளார்.
மேலும் நளிந்த ஜயதிஸ்ஸவின் இக்கருத்து மிகப்பாரதூரமானதாகும் எனச் சுட்டிக்காட்டி தீவிர கரிசனையை வெளிப்படுத்திய தேசிய சமாதானப்பேரவையின் பணிப்பாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரா, ‘நாட்டின் முக்கிய கட்டமைப்புக்களின் உயர் பதவிகளுக்கான நியமனங்களுக்கு இயலுமானவரை சுயாதீனமானவர்களைத் தேடிக்கண்டறிவதே அரசியலமைப்புப்பேரவையின் நோக்கமாகும். அவ்வாறிருக்கையில் அரசியலமைப்புப்பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் இவ்வாறு கூறுவது முறையற்றது. கணக்காய்வாளர் நாயகம் நியமனத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட சகல பெயர்களும் அப்பதவிக்குப் பொருத்தமற்றவை என்பதனாலேயே அவை நிராகரிக்கப்பட்டன. அவ்வாறிருக்கையில் அரசாங்கம் இதனை சந்தேகக்கண்கொண்டு பார்த்து, கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் ஒரு நாடு என்ற ரீதியில் முன்நோக்கிச் செல்லமுடியாது’ எனக் கவலை வெளியிட்டுள்ளார்.



