தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வே வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றவா? என தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் தம்மிடம் வினவியதாகவும், அக்கட்சிகளும் சமஷ்டி தீர்வு எனும் கொள்கையை முன்னிலைப்படுத்தியே மக்கள் ஆணையைப் பெற்றமையினால் அவை அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கவேண்டும் எனத் தாம் பதிலளித்ததாகவும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ண உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இம்மாத நடுப்பகுதியில் தமிழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ்விஜயத்தின்போது அவர்கள் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின், தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு வேல்முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஸ்தாபகரும்அதன் தலைவருமான மருத்துவர் சு.ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் அக்குழுவினர் பரந்துபட்ட சந்திப்புக்களை நடாத்தினர்.
அதன்படி இத்தமிழக விஜயம் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (30) கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 2010 ஆம் ஆண்டு தாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்ததன் பின்னர் தமிழர்களுக்கான தீர்வு குறித்த தமது நிலைப்பாட்டை தமிழக அரசியல் தலைமைகளுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களது ஆதரவைக் கோரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாகவும், இருப்பினும் உரிய ஒழுங்கின் அடிப்படையில் தமிழகத்தின் சகல தலைவர்களுடனும் உத்தியோகபூர்வ சந்திப்புக்களை நடாத்துவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி இம்முறை தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது இலங்கையில் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காது எனச் சுட்டிக்காட்டியதாகவும், ஆகவே தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வை அடைந்துகொள்வதற்கு அவசியமான அழுத்தங்களை தமிழக அரசு உள்ளடங்கலாகத் தமிழகத் தலைவர்கள் வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
அதேபோன்று 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழர்களின் ஒப்புதலின்றித் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய இராச்சிய’ அரசியலமைப்பை மீண்டும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழர்களுக்கான தீர்வை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படக்கூடாது எனத் தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு தமது கருத்துக்களை செவிமடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் தீர்வு விவகாரத்தில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றன எனத் தம்மிடம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்குப் பதிலளித்த தாம் ‘அக்கட்சிகளும் சமஷ்டி தீர்வு எனும் கொள்கையை முன்னிலைப்படுத்தியே மக்கள் ஆணையைப் பெற்றன. எனவே அவையும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கவேண்டும். அதற்கு மாறாக செயற்படுவது என்பது தமிழ்மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணாக செயற்படுவதாகவே அமையும்’ என விளக்களித்தாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.



