திட்வா புயலால் இலங்கையில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி…

இலங்கையில் திட்வா புயலால் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை 2022 பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் எட்டப்பட்ட முன்னேற்றங்களைத் தலைகீழாக மாற்றக்கூடும் என பொருளாதார நிபுணர்கள்  எச்சரிக்கின்றனர்.

இலங்கையில் திட்வா புயல் பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் உலக வங்கி மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அம்மதிப்பீட்டின் ஊடாகக் கண்டறியப்பட்ட ஆரம்பகட்டத் தகவல்களை உள்ளடக்கிய பூர்வாங்க அறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளின் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,பொருளாதார நிபுணர்கள்  இந்த  எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அத்தோடு இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

4.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பாதிப்பில், வீதிகள், பாலங்கள், புகையிரதப் பாதைகள், மின்விநியோக கட்டமைப்புகள், தொலைத்தொடர்புக் கட்டமைப்புக்கள், நீர் விநியோகக் கட்டமைப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 1.735 பில்லியன் அமெரிக்க  டொலராகும்

அதேபோல பொதுமக்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 985 மில்லியன் டொலர்.

விவசாய மற்றும் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பின் பெறுமதி 814 மில்லியன் அமெரிக்க டொலர்.

பாடசாலைகள், சுகாதார வசதிகள், வணிகங்கள், கைத்தொழில் என்பன உள்ளிட்ட வீடுகள் அல்லாத கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 562 மில்லியன் அமெரிக்க டொலர்.

அத்துடன் மறைமுகப் பாதிப்புகளின் பெறுமதி மற்றும் மீளக்கட்டியெழுப்பல் செலவினங்கள் ஆகியவை கணக்கிடப்பட்ட பின், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட மொத்த பாதிப்பின் அளவு மேலும் உயர்வடையக்கூடும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.