பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு

மலையகத்தில் பாதிக்கப்பட்ட 1,641 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது.

இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) ஹட்டனில் நடைபெற்றது. டித்வா புயல் நாடாளவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இதில் மலையகத்தில் 127 பேர் பலியாகி 16 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர்.

இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதியில் 1,641 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 593 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு இன்னமும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் அறிவித்தல் படி 4 இலட்சத்து 56 ஆயிரம் பேர் நிவாரணங்களை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அதில் 3 இலட்சத்து 72 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது 82 சதவீத எனவும், 4 இலட்சத்து 672 பேர் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்திற்கு தகுதியுடையவர்களாகவும் அதில் 3,262 பேருக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிவாரணத்தினை பெற்றுக்கொள்வதற்காக பெரும்பாலான தோட்ட மக்கள் விண்ணப்பித்த போதிலும் ஒரு சில செயலகங்களில் விண்ணப்பப்படிவம் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு நில உரிமை இல்லாமையும் அவர்கள் தொடர்பான விபரங்கள் தோட்ட முகாமையாளரிடம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதனால் இந்த நிவாரணங்கள் பெறுவது தொடர்பான சிக்கல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே, இது குறித்து பேரிடர் நிவாரண செயலணி கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டி மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த செயலணியின் ஏற்பாட்டாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.

பாதிப்பு என்று வரும் போது அனைவருக்கும் பாகுபாடின்றி செயப்பட வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என்றும் இதன் போது பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.