வட,கிழக்கிலுள்ள சட்டவிரோத பௌத்த கட்டுமானங்கள் அமைதியை கொண்டுவராது – சுரேஷ்

வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது என்றும் இலங்கையின் வளர்ச்சிக்கு பங்களிக்காது என்றும் தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் முறைமை மாற்றத்தை முன்வைத்து ஆட்சிபீடம் ஏறியுள்ள இடதுசாரி ஜனநாயகம் பேசும் தற்போதைய அரசு அத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி நாட்டின் நிலையான அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகது,

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களில் அடாத்தாகப் பிடித்த பல காணிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் புத்தகோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுது ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இவற்றைத் தடுத்து நிறுத்தாமல் சட்டவிரோதமாகக் கட்டப்படும் புத்தவிகாரைசளை இன்னும் ஆதரித்து செயற்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளைப் பறிமுதல் செய்து, தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி, சட்டவிரோதமான முறையில் ஒரு பௌத்த ஆலயம் கட்டப்பட்டிருக்கின்றது.

நைனார்தீவில் இருக்கும் நாகவிகாரையின் விகாராதிபதி, இந்தக் காணிகள் விகாரைக்கு உரித்தானதல்ல என்பதையும் அதில் கட்டப்பட்டிருக்கும் விகாரை சட்டவிரோதமானது என்பதையும் தமிழ் மக்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்களல்லர் என்பதையும் அவர்கள் தம்முடன் அன்புடன் பழகுகிறார்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பதுடன் ஐம்பத்து மூன்று வருடங்களாக தாம் இந்தப் பிரதேசத்தில் வசித்து அந்த மக்களுடன் பழகிவருகிறேன் என்ற அடிப்படையிலும் தையிட்டி நாகவிகாரை கட்டுமானமானது சட்டவிரோதமானது என்றும் சிங்கள மக்களுக்கு சிங்கள மொழிமூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கின்றார். நிலைமை அவ்வாறிருக்க, சட்டவிரோதமான விடயங்களை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் சட்டரீதியாக அந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கொடுப்பதை விடுத்து, தொடர்ந்து அந்த மக்களுடன் பேரம் பேசுவதும் வேறிடத்தில் காணிகள் தருகிறோம் என்று கூறுவதும் சட்டவிரோதத்திற்குத் துணைபோவதாகவே பொருள்கொள்ளப்படும்.