மட்டக்களப்பு, காரமுனை பிரதேச மக்களை அச்சுறுத்தி, அவர்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட காரமுனை கிராமத்தின் பிரதிநிதிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்திற்கு முன்பிருந்து தொடர்ச்சியாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு, காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படாமல் இருப்பதாகவும் காரமுனை கிராமத்தினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
வாகரை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட ஏனைய பிரதேச மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், காரமுனை பிரதேச மக்களுக்கு மாத்திரம் இதுவரை அனுமதிப்பத்திரமும் வழங்காது அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில், காரமுனை மக்களுக்கு உடனடியாக காணி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உறுதியளித்துள்ளார்.



