இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை தேவராசாவின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் வள நிலையத்தில் இன்று (25) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணன் இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
இதன்போது மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் திருவுருவப் படத்துக்கு அன்னாரின் உறவினரான அக்கரைப் பாக்கியனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் உறுப்பினர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணனால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.
பின்னர், அன்னாரது உறவினரான அக்கரைப் பாக்கியன் பேருரை ஆற்றினார்.
1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளராக கணபதிப்பிள்ளை தேவராசா கருதப்படுகிறார்.




