இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மலையக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அண்மைய அனர்த்தப் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் காணி மற்றும் வீடுகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்ததாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அண்மைய இயற்கை அனர்த்தங்களால் மலையக மக்களே உயிர் மற்றும் உடமைகளை அதிகம் இழந்துள்ளனர் என்ற கசப்பான உண்மை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான காணிகளை வழங்கும் பட்சத்தில், இந்தியாவினால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 10,000 வீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கு விரைவாக வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் 4 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்படி நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை, தற்போது இடம்பெயர்ந்துள்ள 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாகத் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வர வேண்டும் எனவும் புதிய இடங்களுக்கு மக்கள் மாற்றப்படும்போது, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான பொருளாதார உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் “இந்திய இல்லத்தில்” நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஜனநாயக ரீதியாக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, நீண்டகாலமாக இழுபறியில் உள்ள மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தற்போதைய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயக்கம் காட்டுவதை சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், இந்தியா இதில் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனக் கோரியதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்திய – இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இடையே நிலவும் நீண்டகால முரண்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும், இருதரப்பு வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்



