அரசியலமைப்புப்பேரவைக்கான சிவில் உறுப்பினர் நியமனம்: வெளிப்படைத்தன்மையைப் பேணுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்குக் கடிதம்

அரசியலமைப்புப்பேரவையில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், அதற்குரிய நியமனங்களை முறையான ஆலோசனைகளின் பிரகாரம் வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடமும், ஏனைய முக்கிய தரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்புப்பேரவையில் அங்கம் வகிக்கும் சிவில் சமூக உறுப்பினர்களான கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி டில்ருக்ஷி அனுலா விஜேசுந்தர மற்றும் பேராசிரியர் டினேஷா சமரரத்ன ஆகிய மூவரின் பதவிக்காலம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவுக்கு வருவதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்த்ததின்கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப்பேரவையானது முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் அனுமதியை வழங்குவதன் ஊடாக ஆணைக்குழுக்களின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது’ என சட்டத்தரணிகள் சங்கம் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.

எனவே அப்பேரவைக்கு நேர்மையான, சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பொருத்தமான நபர்களை நியமிக்கவேண்டியது மிக அவசியம் எனவும், ஆகவே இந்நியமனங்கள் தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆலோசனைகளை மேற்கொண்டு, வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் நியமனங்களை மேற்கொள்ளுமாறும் அச்சங்கம் கோரியுள்ளது.