சிறுவர்கள் மத்தியில் மந்தபோசணை – யுனிசெப் அமைப்பிடமிருந்து நன்கொடை

‘டித்வா’ சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் மந்தபோசணை குறைபாட்டுக்கு முகங்கொடுத்திருக்கும் சிறுவர்களுக்கு உதவும் நோக்கில் 20,000 கிலோகிராம் BP-5 எனும் போசணைப்பதார்த்தம் யுனிசெப் அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

‘டித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றம் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி போதியளவு போசணைப்பதார்த்தங்கள் அடங்கிய உணவுப்பொருட்கள் கிட்டாமையினால் சிறுவர்கள் மத்தியில் மந்தபோசணை நிலை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் 6 மாதக் குழந்தைகள் தொடக்கம் 5 வயது வரையான சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான 25,000 கிலோகிராம் BP-5 எனும் போசணைப் பதார்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள யுனிசெப் அலுவலக அதிகாரிகளால் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளிக்கப்பட்டது.