மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு தொடர்ந்த ஆதரவு தருவோம்– இந்தியா

மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காணிகளை பெற்றுக்கொள்ளுங்கள், வீடுகளை கட்டுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிற்கும், மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இருதரப்பு  செவ்வாய்க்கிழமை (23) கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராதா கிருஷ்ணன், தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் துரிதமாக வழங்கிய ஒத்துழைப்புக்கு மலையக தமிழ் பிரதிநிதிகள் இதன்போது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

அனர்த்தங்களால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மலையகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்டி, பதுளை, நுவரெலியா,மாத்தளை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புக்களை தமிழ் பிரதிநிதிகள் இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர்.

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டு விடயங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களை அவதானித்ததன் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர்

‘ மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காணிகளை பெற்றுக்கொள்ளுங்கள், வீடுகளை கட்டுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் சுகாதாரம், கல்வி உட்பட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இலங்கைத்  தொழிலாளர் காங்கிரஸ் இச்சந்தர்ப்பத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.