முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.
புதிய தவிசாளர் தெரிவு இன்று (23) நடைபெற்ற நிலையில், 14 மேலதிக வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன், புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் எஸ்.சுதர்சன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
2025ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலை தொடர்ந்து, இலங்கை தமிழரசு கட்சியின் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எனினும், உட்கட்சி முறுகல் காரணமாக அவர் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் யோகேஷ்வரன் அனோஜன் தலைமையில் சபையின் செயற்பாடுகள் தற்காலிகமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதேவேளை, கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டு எதிர்க்கட்சியினர் உடனடியாக மாநகரசபையின் கட்டுப்பாட்டைத் தம்வசம் எடுத்துக்கொள்வார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
”முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பாக அமையாமல், பகிரங்க வாக்கெடுப்பாக இருந்திருந்தால், ஆரம்பத்திலேயே எதிர்க்கட்சிகள் மாநகரசபையைக் கைப்பற்றியிருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



