யுனிசெஃப் மூலம் நோயெதிர்ப்பு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி

2026 – 2030 காலப்பகுதிக்கான யுனிசெஃப் உலகளாவிய விநியோக அலகின் மூலம் இலங்கையின் தேசிய நோயெதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு தடுப்பூசி பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 23 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார தாபனத்தின் நோயெதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு இணங்க உயர்தரத்திலான தடுப்பூசிகளை நியாய விலையில் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையின் தேசிய நோயெதிர்ப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் 11 நோய்த்தடுப்புக்கு வருடாந்தம் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பிள்ளைகளுக்கும், 03 இலட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. குறித்த நோயெதிர்ப்புத் தடுப்பூசிகளைப் பெறுகை செய்வதற்கு தடுப்பூசி ஏற்றல் மற்றும் நோயெதிர்ப்புக்கான உலகளாவிய ஒன்றியம் (Global Alliance for Vaccines and Immunization) 2000 ஆம் ஆண்டு தொடக்கம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

அத்துடன், குறித்த ஓன்றியம் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த பெறுகை மூலம் யுனிசெஃப் இன் உலகளாவிய விநியோக அலகின் மூலம் தடுப்பூசிகளைப் பெறுகை செய்வதற்கு இயலுமாகும் வகையில் நிதியுதவி வழங்கியுள்ளது.

தனிநாடாக மேற்கொள்கின்ற பெறுகைச் செயன்முறையாக அல்லாமல், யுனிசெஃப் இன் உலகளாவிய விநியோக அலகின் மூலம் பெறுகை செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் போது, உலக சுகாதார தாபனத்தால் விதந்துரைக்கப்பட்ட மற்றும்  பூர்வாங்க தகைமைகளைப் பெற்ற தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், அதன்மூலம் விநியோகிக்கும் போதான பாதுகாப்பும் அதிகளவவில் உறுதிப்படுத்தப்படுகின்றது.

அத்துடன், தடுப்பூசி விநியோகத்தைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கும், தடுப்பூசிகளை சரியான காலப்பகுதியில் விநியோகிப்பதற்கும் மற்றும் பயனுள்ள பெறுகை முறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் இயலுமை கிடைக்கும். அதற்கமைய, 2026 – 2030 காலப்பகுதிக்கான யுனிசெஃப் உலகளாவிய விநியோக அலகின் மூலம் இலங்கையின் தேசிய நோயெதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு பெறுகை செய்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.