மாகாண சபை முறைமை குறித்து விவாதிக்க ஜே.வி.பியின் செயலாளர் இந்தியா பயணம்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கடந்த நவம்பர் மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவ்விஜயத்தின்போது அதியுயர் மட்ட சந்திப்புக்களில் அவர் பங்கேற்பார் எனவும், மாவட்ட சபைகள் முறைமை அல்லது மக்களால் தெரிவுசெய்யப்படும் நிறைவேற்றதிகார ஆளுநர் முறைமை ஊடாக மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் ஆலோசனை குறித்துக் கலந்துரையாடப்படும் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் தாமதமானது.  இந்நிலையில் குறித்த விஜயம் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவிருப்பதாகவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது இதுபற்றி ஆராயப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.