பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ‘ஒண்டன்செட்ரோன்’ (Ondansetron) ஊசி மருந்துத் தொகுதிகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பிப் பரிசோதிக்குமாறும், அதற்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்பதாகவும் இந்தியத் தயாரிப்பு நிறுவனமான ‘மான் பார்மாசூட்டிகல்ஸ்’ (Maan Pharmaceuticals) இலங்கை சுகாதார அமைச்சுக்குத் தெரிவித்துள்ளது.
வாந்தி மற்றும் அது சார்ந்த உபாதைகளுக்காக நோயாளர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊசி மருந்தின் 4 தொகுதிகளை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பயன்பாட்டிலிருந்து நீக்க தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை கடந்த 13ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.
கண்டி தேசிய மருத்துமனையின் நுண்ணுயிரியல் பிரிவு மேற்கொண்ட ஆரம்பகட்ட சோதனையில், இந்த மருந்துகளில் கிருமிகள் அடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததே இதற்குக் காரணமாகும்.
அத்துடன், IDH எனப்படும் கொழும்பு தேசிய தொற்றுநோயியல் நிறுவகத்தில் அண்மையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளர்கள் உயிரிழந்தனர்.
அவர்களுக்கான சிகிச்சையின் போது குறிப்பிட்ட ஊசி மருந்து வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தேசிய ஔடதங்கள் அதிகாரசபையிடம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணங்களுக்கும் குறித்த ஊசி மருந்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இது தொடர்பாகச் சுகாதார அமைச்சுக்குக் கடிதம் எழுதியுள்ள இந்திய உற்பத்தி நிறுவனம், மருந்து மாதிரிகளைச் சர்வதேசப் பரிசோதனைக்கு உட்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பரிசோதனைக்கு அனுப்பப்படும் மருந்து மாதிரிகள் இலங்கையில் உரிய தரம் மற்றும் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன என்பதை உறுதிப்படுத்துவது இலங்கைச் சுகாதாரப் பிரிவினரின் பொறுப்பு என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



