தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக  நேற்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது.

குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டம்,  முன்னெடுக்கப்பட்ட போது, விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டமையால் , அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த போராட்டம் ஒரு அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விளக்கினர்.

“விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவில்லை. விகாரைக்கு சேதம் விளைவிக்கவில்லை. விகாரைக்கு செல்லும் வீதியில் நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருப்பீர்கள்’ என்று பொலிஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் , வேலன் சுவாமிகள் , வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதனால் போராட்ட களத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.