டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளி, 600க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்ததுடன், பல மில்லியன் மக்களை பாதித்துள்ளது.
வெள்ளப்பெருக்குகள் மற்றும் மண்சரிவுகளால், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததுடன், முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்து, நாட்டின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பேரழிவு காரணமாக உருவான அவசர நிதி மற்றும் வெளிநாட்டு செலுத்தல் அழுத்தங்களை சமாளிப்பதற்காகவே இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாம் மீளாய்வு நிறைவு நிலையை அணுகிய வேளையில், டித்வா சூறாவளி தாக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில், பேரழிவின் பொருளாதார தாக்கங்களை மதிப்பீடு செய்யவும், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதிய திட்டம் எவ்வாறு சிறப்பாக பங்களிக்க முடியும் என்பதை ஆய்வு செய்யவும் கால அவகாசம் தேவைப்படுவதால், ஐந்தாம் கட்ட மீளாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு விஜயம் செய்து, மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



